உலகம்

“என்னைச் சிறையில் அடைத்தால், ஆபத்தானவன் ஆகி விடுவேன்” – இம்ரான்கான்

(UTV |  இஸ்லாமாபாத்) – பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இம்ரான்கானின் பிரதமர் பதவி கடந்த ஏப்ரல் மாதம் 10ம் திகதி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்தி பேசி வருகிறார்.

நாட்டின் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 20-ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெண் நீதிபதியையும், போலீஸ் துறையையும் மிரட்டியதாக இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு அலி ஜாவத் முறைப்பாடு செய்தார். அதன் பேரில் அவருக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு இன்று(12) வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. அதன் பின்னர் என்ன ஆகும் என தெரியவில்லை. இது தொடர்பான ஒரு விசாரணைக்கு அவர் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக வந்தபோது அங்கு பொலிஸ் குவிக்கப்பட்டிருந்தது.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; கோர்ட்டில் பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது;

“.. அதிகாரிகள் யாருக்கு பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. என்னை சிறையில் அடைத்தால் நான் இன்னும் ஆபத்தானவன் ஆகி விடுவேன்.

பெண் நீதிபதி தொடர்பாக கோர்ட்டில் எனது கருத்து பற்றி எடுத்துக்கூறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு சூழல் உள்ளது. நாடு நாளுக்கு நாள் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்.பின் அறிக்கை இதைத்தான் காட்டுகிறது. அவர்கள் என்ன விரும்பினாலும் செய்யட்டும்.

ஆனால் நாட்டின் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டுமானால் அதற்கு புதிதாக தேர்தல் நடத்துவதுதான் தீர்வு ஆகும். நான் என் பதவிக்காலத்தில் எனது எதிரிகள் யாரையும் பலி கடா ஆக்கவில்லை. சில வழக்குகள் தவறாக கையாளப்பட்டிருக்கலாம்.

ஆனால் பின்னர்தான் அதுபற்றி எனக்கு தெரிய வந்தது. சில முக்கியமான நபர்களுடன் நான் பின்வாசல் வழியாக தொடர்பில் இருப்பதாக ஊகங்கள் கூறுவது தவறு. நவாஸ் ஷெரீப்புடன் தொடர்பில் இருந்த அதிகாரியை சந்தித்தீர்களா என கேட்கிறீர்கள். அப்படியெல்லாம் எதுவும் நடைபெறவில்லை..” இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ரஷ்யா பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

காசா பகுதிக்கு எகிப்தின் உதவிகள்!