(UTV | இலண்டன்) – இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி அந்நாட்டுடன் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணம் அடைந்ததையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆட்டம் மீண்டும் தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.