உள்நாடு

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை உருவாக்க புதிய குழு

(UTV | கொழும்பு) – தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரிவான சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சின் செயலாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட குழு அமைக்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சர், நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இந்த கூட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தின் புதிய பரிமாணங்கள் தொடர்பான விதிகளை அறிமுகப்படுத்துவதற்காக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் பலவீனங்களைக் களைவதும், பயங்கரவாத எதிர்ப்பு, சட்ட அமலாக்கம், விசாரணை மற்றும் கண்காணிப்பு ஆகிய கருவிகளை மேலும் வலுப்படுத்துவதும் இதன் நோக்கங்களாகும்.

இதன்படி, விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நியமங்கள்/பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு அனைத்து சம்பந்தப்பட்ட விடயங்களிலும் கவனம் செலுத்தி தேசிய பாதுகாப்பு தொடர்பான இந்த விரிவான சட்ட அமைப்பை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

Related posts

நீரில் அள்ளுண்ட நால்வரில் – இருவர் சடலங்களாக மீட்பு

பாடசாலைகளின் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்