(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேகா அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை முடித்துக்கொண்ட நீதியரசர்கள் குழாம், ஆகஸ்ட் 23ஆம் திகதி தனது மனுவை சமர்பிப்பதாக அறிவித்தது.
அதன்படி இன்று காலை பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பார்.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், பாராளுமன்ற நடவடிக்கைகள் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் போசாக்கின்மை நிலைமை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நடைபெறவுள்ளதுடன், அதே விவாதம் நாளையும் (07) நடைபெறவுள்ளது.
இந்த வருடத்துக்கான மத்திய அரசின் நிதி நிலைமை குறித்த அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.