(UTV | கொழும்பு) – சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸார், விசாரணை செய்யவேண்டியுள்ளதால் அதற்கான அழைப்புக்கடிதம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 09.09.2022 அன்று இலக்கம் 149 பூட்டாலி கட்டிட தொகுதி கிருளப்பனை-கொழும்பு 05 என்ற முகவரியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு 01 இன் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களை சந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது தந்தை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் பிறிதொரு திகதியை தருமாறு கேட்டுக்கொண்டதாகவும், என்ன காரணத்திற்காக விசாரணை என்ற விபரங்கள் எதுவும் எனக்கு கூறப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதேபோல் ஏற்கனவே இதே பிரிவினரால் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாவும் சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன் விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு (TID) செப்டம்பர் 14 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளார்.
செங்கலடியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் விசாரணை தொடர்பான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.