(UTV | நிந்தவூர்) – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று (22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. அப்துல் லத்தீப், கரையோர வளம் பேணல் பாதுகாப்பு தினைக்களத்தின் பிரதம பொறியியலாளர், நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் செயலாளர் எம்.எஸ்.எம். நிப்றாஸ் மற்றும் அதன் பிரதிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கடலரிப்பை தற்காலிகமாக தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் விளக்கமளித்தார்.
அத்துடன் இக்கடலரிப்பிற்கு உள்ளாகும் பிரதேசங்களையும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளையும் மேலும் அழிவடையாத வண்ணம் பாதுகாத்து மீளக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துரைத்தார். மேலும் இக்கடலரிப்பை தடுப்பதற்காக நிந்தவூர் பிரதேச சபையிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சி பிரதிநிதிகளும் தங்கள் கட்சி தலைமைகளுடன் கலந்துரையாடி உயர் மட்ட தீர்வுகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதன் போது கருத்து தெரிவிக்கையில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர்; இவ்வாரம் நடைபெற்ற தடுப்பு வேலைகளின் போது தேவையான எரிபொருளை வழங்கிய பிரதேச சபை தவிசாளர் மற்றும் Osaka lanka IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கும் தனது நன்றிகளை பரிமாரிக் கொண்டார்.
மேலும் இந்த கடல் அரிப்பை தடுப்பதற்காக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எரிபொருள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு தேவையான நிதியை பிரதேச சபை நிதியிலிருந்து வழங்குவதாகவும் இதனைக் கொண்டு வேலைகளை துரிதப்படுத்துமாறும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் பொறியியலாளரை கேட்டுக்கொண்டார்.
மேலும் நிரந்தர தீர்வினை நோக்கிய கலந்துரையாடலில் அதற்கான முன்னெடுப்புகள் மற்றும் செயற்பாடுகளை பொறியியலாளர் விளக்கிய போது கடலின் நீரோட்டதுக்கு குறுக்காக கிழக்கு மேற்காக கற்கள் இடும் பணியை நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை உரிய அமைச்சரோடு தொடர்புகொண்டு முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாட்டின் நிதி நிலைமை கருதி நிதி பற்றாக்குறைகள் ஏற்படும் போது நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியும் ஊர் சார்பான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் சபையில் கலந்துரையாடப்பட்டதுடன் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் அவசரமாகவும் மேற்கொள்ளுமாறும் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் பொறியியலாளரைக் கேட்டுக்கொண்டார்.
இதன்போது நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் செயலாளர் எம்.எஸ்.எம். நிப்றாஸ் நிந்தவூர் அனர்த்த முகாமைத்து அணியினரால் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் நிரந்தரமாக இதனை தடுப்பதற்குரிய தீர்வை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
– ஊடகப் பிரிவு-