(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொது போக்குவரத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் செப்டம்பர் மாதம் முதல் முக்கிய இடங்கள் சிலவற்றுக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவைகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, வாரயிறுதி விசேட புகையிரத சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த சிறப்பு ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் எனத் தெரிவித்த அவர், இரண்டு சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“கொழும்பில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை இரவு திரும்பும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் ‘நைட் ரைடர்’ புகையிரதம் அதன் கொள்ளளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கிறது. கண்டி வழியாக பதுளை வரை மலையகத்திற்கான பிரபலமான ரயில் பாதைகள் மற்றும் எல்ல நிலையங்கள் அடுத்த மாதம் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கினார்.
இதற்கிடையில், போக்குவரத்து அமைச்சகம் வேறு சில இடங்களுக்கு ஒருங்கிணைந்த ரயில்-பஸ் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
வார இறுதியில் பெலியத்த வரை விசேட புகையிரதத்தை இணைப்பதற்கு அமைச்சு முயற்சித்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுடன் இணைந்து பெலியத்தயிலிருந்து கதிர்காமத்திற்கு பயணிக்கும் பயணிகள் மறுநாள் அதே பாதையில் திரும்பிச் செல்லும் வகையில் ஒன்றிணைந்த பேருந்து சேவையை ஆரம்பிப்பது குறித்தும் அவதானித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோன்று, அனுராதபுரத்திற்கு வார இறுதி ரயில் மற்றும் பஸ் சேவையும், எட்டு புனித தலங்களுக்கு செல்வதற்கு சிறப்பு பஸ் சேவையும் அறிமுகப்படுத்தப்படும்.
கண்டி, பாசி-குடா மற்றும் கல் குடா போன்ற இடங்களுக்கும் இதேபோன்ற போக்குவரத்து திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.