உள்நாடு

ஆறு அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியமைக்கு ஜனாதிபதிக்கு தமிழ் கட்சிகள் பாராட்டு

(UTV | கொழும்பு) –  ஆறு வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும் அறுநூறு தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி. கட்சி உட்பட பெரும்பான்மையான தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த முடிவை தாம் பாராட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களும் தனிநபர்களும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படவில்லை என சுட்டிக்காட்டிய சுமந்திரன், அந்த அமைப்புக்களும் தனிநபர்களும் எந்தவித விசாரணையும் இன்றி இலங்கையில் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார்.

இந்தத் தடையை நீக்குவது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் அரசுக்கு வலியுறுத்தினார்.

இலங்கையில் ஆறு புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஈ.பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்தவித தயக்கமும் இன்றி ஈ.பி.டி.பி. கட்சியின் ஆதரவை தெரிவிப்பதாக தெரிவித்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது தமது கட்சி ஜனாதிபதியிடம் முன்வைத்த 10 யோசனைகளில் ஒன்று எனவும் தெரிவித்தார்.

ஆறு புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 316 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியமை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இந்த நாட்டில் வாழும் தமது உறவினர்களின் பொருளாதாரத்தை உயர்த்த முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்கள் இருப்பதாகவும், அதற்கான நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சமந்தா பவர் இலங்கைக்கு

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்