விளையாட்டு

காமன்வெல்த் 2022: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய இந்தியா

(UTV | இங்கிலாந்து) – காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. தொடக்க போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியும் பர்படாஸூக்கு எதிராக தோல்வியை தழுவியதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி அரம்பம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 18 ஓவர் முடிவில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் ஸ்னே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 42 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஸ்மிரிதி மந்தனாவின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 12 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் இந்திய பெண்கள் முதலிடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம், 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் முறியடித்துள்ளார்.

Related posts

LPL : கொழும்பு கிங்க்ஸ் எதிர்பாரா வெற்றி

IPL போட்டியில் இருந்து விலகினார் ஹரி

இலங்கை – இங்கிலாந்து மோதும் 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று