(UTV | கொழும்பு) – தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி எரிபொருள் வெளியீடு இன்று (01) முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கம், டோக்கன் மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட மற்ற முறைகளின் அடிப்படையிலான நம்பர் பிளேட் அமைப்பு இன்றுக்குப் பிறகு செல்லாது.
இதற்கிடையில், QR அமைப்பின் கீழ், எந்தவொரு நபரும் இன்று முதல் ஒரு வாரத்திற்குள் ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெற முடியும். இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் மக்களை அந்த இடங்களில் நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு சேஸ் இலக்கத்துடன் பதிவு செய்ய முடியாத வாகன பாவனையாளர்கள் நேற்று (31ஆம் திகதி) முதல் வருமான உரிம இலக்கத்துடன் பதிவு செய்து கொள்ளலாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு எரிசக்தி அமைச்சு மக்களைக் கோரியுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் அல்லது காணொளி ஆதாரங்களை 074 212 31 23 என்ற எண்ணுக்கு WhatsApp மூலம் அனுப்பலாம். புகைப்படம் அல்லது காணொளி ஆதாரம் மூலம் ஒருவர் தவறு செய்தவர் என தெரியவந்தால், அவர்களின் QR அணுகல் தற்காலிகமாக தடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதுவரை 5 மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் உரிமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.