(UTV | கொழும்பு) – ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவு என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை அழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், எதிர்காலத்தில் பொதுஜன முன்னணி வலுவடைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் இந்திக அனுருத்த மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி பற்றிய மக்களின் அபிப்பிராயத்தை காணமுடியும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் தமது கட்சியை நிராகரித்தால் அதனை கட்சி என்ற வகையில் ஏற்றுக்கொள்ள தயார் எனவும் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சியின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார் எனவும் எதிர்வரும் தேர்தலில் அவரது தலைமையில் கட்சி போட்டியிடும் எனவும் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (ஜூலை 27) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.