விளையாட்டு

ஐபிஎல் அணிகள் நிச்சயம் குறி வைக்கும் ‘ரெய்னா’

(UTV | இந்தியா) –  தென்னாப்பிரிக்க பிரிமியர் லீக் தொடரில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலம் பல இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. மேலும், கோடிக்கணக்கில் லாபமும் கிடைப்பதால், இந்த தொகையை வைத்து பிசிசிஐ பல வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது.

ஐபிஎலுக்கு உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வரும் நிலையில் பல நாடுகளும் டி20 லீக் தொடரை நடத்த ஆரம்பித்துவிட்டன. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் பிரிமீயர் லீக், மேற்கிந்தியத் தீவுகளில் சிபிஎல், இலங்கையில் லங்கா பிரிமியர் லீக் போன்ற தொடர்கள் நடந்து வருகின்றன.

இந்த தொடர்கள் அனைத்தும் ஐபிஎலை போல லாபத்தை கொட்டிக்கொடுக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு லாபத்தை ஈட்டிக்கொடுத்து கொண்டுதான் இருக்கிறது.

மும்பை, சிஎஸ்கே:

இந்நிலையில் மொத்தமுள்ள 6 அணிகளையும் ஐபிஎல் அணிகள்தான் வாங்கியுள்ளன. கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸும், ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற அணிகளையும்:

மேலும் டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேபிடல்ஸும், போர்ட் எலிசபெத் அணியை சன் ரைசர்ஸும், பா்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸும் வாங்கும் என தகவல் வெளியாகியுள்ளன.

இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு:

இப்படி தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் அனைத்து அணிகளையும் ஐபிஎல் அணிகளே வாங்கியுள்ளதால், இது கிட்டதட்ட இந்திய தொடர்போல்தான் அமைந்துள்ளது. இதனால், இதில் இந்திய வீரர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.

சோப்ரா பேட்டி:

இதுகுறித்து பேசிய இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ‘‘தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடருக்கான 6 அணிகளையும் இந்திய உரிமையாளர்களே வாங்கியுள்ளனர். இதனால், இதில் இந்திய வீரர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஐபிஎலை தவிர்த்து மற்ற போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் இத்தொடரில் பங்கேற்க முடியும். இவர் ஸ்டார் வீரர் என்பதால், அணிகள் இவரை கேப்டனாக வாங்க கூட வாய்ப்புள்ளது. ஐபிஎலுக்கு திரும்ப ரெய்னா, இத்தொடரை பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்’’ என்று கூறினார்.

பிசிசிஐ விதிமுறைப்படி, இந்திய அணிக்காக விளையாடிய வீரர் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்றால் மீண்டும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர், டி20 லீக் தொடர்களில் பங்கேற்க முடியாது. இதனால்தான், இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்திய உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்க டி20 லீக் அணிகளை வாங்கியிருப்பதால், அதனை காரணமாக வைத்து முதல்முறையாக இந்திய வீரர்கள் டி20 லீக் தொடர்களில் பிசிசிஐ அனுமதியுடன் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தென்னாப்பிரிக்க பிரிமியர் லீக் தொடர் வரும் ஜனவரி மாதம் துவங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேற்கிந்திய தீவுகளின் உபத்தலைவராக க்றிஸ் கெயில்

இலங்கை வீரர்களிடம் பாக். அணி தலைவரின் தாழ்மையான வேண்டுகோள்

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்