(UTV | கொழும்பு) – ஜனாதிபதி செயலக நுழைவாயிலை ஆக்கிரமித்திருந்த குழுவினர் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் அகற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸ், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்
அதிகாலை 1.30 மணியளவில், ஜனாதிபதி அலுவலகத்தின் திசையிலிருந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் நுழைந்து, போராட்டக்காரர்களையும், அந்த இடத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த தற்காலிக கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருந்து காலி முகத்திடல் போராட்டம் இடம் வரையிலான பகுதியை பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் ஆக்கிரமித்து அவற்றுக்கிடையே இருந்த அனைத்து தற்காலிக கட்டமைப்புகளையும் அகற்றியுள்ளனர்.