(UTV | வாஷிங்டன்) – ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார். அங்கு அதிபர் புதின் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. புதினும் ரஷியாவும் எந்த அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
இப்போது அவர்கள் உதவிக்காக ஈரானிடம் திரும்ப வேண்டும். ஈரானிடம் இருந்து ராணுவ டிரோன்களை நாடுகிறது. ஈரானிடம் இருந்து ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களைக் கோருவதன் மூலம், உக்ரைனில் நடக்கும் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் அதிபர் புதின் தீவிரம் காட்டவில்லை என தெரிவித்தார்.