(UTV | கொழும்பு) – அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை முடக்கி சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டச் சட்டங்களின் கீழ் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கும் வருவதற்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும், பாராளுமன்றத்திற்குள் கூட சுதந்திரமாகச் செயற்பட வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து கிராமத்திற்கு வாருங்கள் என சமூக வலைதளங்களில் பதிவுகளை காட்டி அழுத்தங்களை பிரயோகிப்பதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் செயற்பாட்டாளர்களின் அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் தவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இது தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் எவரேனும் உறுப்பினர்களுக்கு தேவையற்ற செல்வாக்கு மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினால் சட்டத்தின் பிரகாரம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.