(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, அதுவரை வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, வாகனங்களை வைத்திருப்போர், fuelpass.gov.lk என்ற இணைத்தளத்துக்கு பிரவேசித்து தேசிய எரிபொருள் அட்டைக்காக தங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, முன்பாக வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் ஆரம்பமாகும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
எனவே, எரிபொருள் விநியோகம் இடம்பெறும் வரையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நேற்றிரவு 10 மணி முதல் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்காக திருகோணமலை ஐ.ஓ.சி முனையத்தில் இருந்து 2 மில்லியன் லீட்டர் பெற்றோல் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சியின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.