உள்நாடு

பொருளாதார நெருக்கடியினால் மிருகக்காட்சிசாலை மிருகங்களும் பட்டினியில்..

(UTV | கொழும்பு) – தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் ஏனைய மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகள் நாளாந்த உணவை வழங்குவதற்கு போதிய நிதி வசதியின்மையால் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குவதாக விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு, உணவு பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்நடை தீவன விநியோகஸ்தர்களுக்கு 59 மில்லியன் ரூபா நிலுவையாக உள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சருடனான கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வருடத்தின் எஞ்சிய காலப்பகுதியில் கால்நடை தீவனத்திற்காக 120 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் விலங்கியல் திணைக்களம் குறிப்பிடுகிறது.

நீதிமன்ற காவலில் உள்ள யானைகளுக்கு வருடமொன்றுக்கு சுமார் 45 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்திற் கொண்டு விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, திறைசேரியுடன் கலந்தாலோசித்து நிதியுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

விலங்குகள் மீது ஆர்வமுள்ள மக்களின் ஆதரவுடன் கால்நடை பராமரிப்பு நிறுவனங்களின் ஆதரவான அமைப்பை துரிதப்படுத்துமாறு திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விலங்குகளை பராமரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கைக்கு பாதிப்பு இல்லை

“மா விலை குறைவினால் பாண் – பன்களின் விலையில் மாற்றமில்லை”

8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு!