(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நாட்டில் மீண்டும் ஒரு கடுமையான டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகிப்பதை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த டீசல் கப்பல் இம்மாதம் கடைசி சில தினங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதுவரை டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 21ஆம் திகதி டீசல் கப்பல் ஒன்று 40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் இலங்கைக்கு வந்துள்ளது. இது இந்திய கடனின் கீழ் இலங்கையால் பெறப்பட்டது மற்றும் டீசல் கையிருப்பில் பெரும்பகுதி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 6,600 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பௌசர் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலின் நீண்ட வரிசைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவதானிக்கப்படுகின்றது.