(UTV | கொழும்பு) – கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்னாள் பிரதமரிடம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், மேலதிக தகவல்கள் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
இதேவேளை, வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட நால்வரும் நேற்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்து 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.