உள்நாடு

பிரதமர் பதவி விலகியதன் பின் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறியப்படுத்தியுள்ளார்.

தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் தான் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முதல் கட்டாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு, பொறுப்பு வழங்கப்படும் நபர்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கால எல்லை என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதற்காக, 2020ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தற்போது சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

நாட்டின் சமகால சமூக, பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வாக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவுமாறு, மூன்று பௌத்த மகா பீடங்களும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் என பல தரப்பினரும் கோரியுள்ளதாக ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

தொற்றில் இருந்து இன்றும் 324 பேர் மீண்டனர்