உள்நாடு

‘கோட்டாகோஹோம்’ போராட்டத்தை ஆதரிக்க ஊடகங்களும் முன்வர வேண்டும்’

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதியே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நாட்டில் பொருட்களின் விலைகளை மக்களால் ஜீரணிக்க முடியாதுள்ளது. கடந்த அரசாங்கம் அரிசி ரூ.80க்கும் பருப்பு ரூ.145 இற்கும் வழங்கியது. கட்டுப்பாட்டு விலையினை பாதுகாத்து, மக்களுக்கு நிவாரண விலையில் பொருட்களை வழங்க அரச அதிகாரிகள் அர்ப்பணித்திருந்தனர்.

ஆனால் தற்போது பொருட்களின் விலைகளை வியாபாரிகளே தீர்மானிக்கின்றனர். கடந்த அரசாங்கத்தின் போது மக்கள் தரப்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் வழங்க முடிந்தது. ஆனால் இன்று அவ்வாறான நிலை இல்லை.

தேவைக்கேற்ப பொருட்களின் விலையை அதிகரிக்க அன்றைய அரசாங்கத்தில் நாங்கள் இடமளிக்கவில்லை. ஆனால் இன்று வியாபாரிகள் முடிவுகளை எடுக்கின்றனர். இப்போது அரசு என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படிப்பட்ட நாட்டை ஆள முடியுமா? மக்கள் இப்படி வாழ முடியுமா? என்பது கேள்வியே..

ஜனாதிபதியின் இந்த அரசாங்கம் விவசாயத்தை அழித்தது. விவசாயத்தை நம்பி வாழும் 2 மில்லியன் குடும்பங்கள் உணவினை இழந்துள்ளன. மக்கள் வாழ முடியாது என்பதால் வீதியில் இறங்கி நடக்கும் போராட்டங்கள் நியாயமானவையே. ‘கோட்டாகோஹோம்’ போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

“மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு