(UTV | கொழும்பு) – மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெருக்கடியை ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகின்றார். அந்த உரையின் ஊடாகவே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் ஆற்றிய முழுமையான உரை கீழ்வருமாறு,
எங்கள் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை கடந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும்.
கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என நான் நம்புகிறேன்.
இத்தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நம் மக்களை எம்மால் பாதுகாக்க முடிந்தபோதும், தற்போது எங்கள் நாடு சவால்களுக்கு உட்பட்டு இருப்பதை எமக்கு உணர முடிகின்றது.
நாடு முடக்கப்பட்டதோடு அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்ததுடன், வெளிநாட்டு கையிருப்பு சிதைவடைந்தது என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை.
கடலில் எண்ணெய் கப்பல்கள் கண்களுக்கு எட்டும் தூரத்தில் இருந்தபோதும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான டொலர் எம்மிடம் இல்லாதததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதற்கு நேரிட்டுள்ளது.
யுத்தத்தை வெற்றிகொண்டு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரை, தற்போது எனது நினைவிற்கு வருகின்றது.
அன்று ‘மின்சார தடையில்லாத நாடொன்றை எதிர்காலத்தில் கட்டியெழுப்புவோம்’ என நான் கூறினேன். அதற்காக நாம் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து நாம் செயலாற்றிய போதும், கடந்த அரசாங்கம் எமது வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லாமையினால் அந்த எதிர்பார்புகளை எம்மால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நாட்களாக வரிசையில் நிற்கும் மக்களின் கஷ்டம் எமக்கு நன்கு புரிகின்றது. எரிவாயுவை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பெண்களின் வேதனையை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
பொருட்களின் விலை, விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அனுபவித்துவரும் துன்பம் குறித்து நம் அனைவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.
அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என நாம் சகல கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தோம். ஆனால் வரவில்லை. இந்த தருணத்தில் கட்சி குறித்து சிந்திப்பதைவிட நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே நம் அனைவரதும் பொறுப்பாகும்.
யார் பொறுப்பை ஏற்காவிடினும் ஆட்சியிலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த இறுதி பொறுப்பை ஏற்க வேண்டும். நாம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவோம்.
30 ஆண்டுகால பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாதொழித்து, இந்நாட்டு மக்களின் மனதில் இருந்த பயத்தை அகற்றியது, இதுபோன்ற துன்பத்தில் மக்களை தள்ளுவதற்காக அல்ல.
மக்களாகிய உங்களை வரிசையில் நிறுத்துவதற்காக நாம் வீதிகளையும், அதிவேக நெடுஞ்சாலைகளையும் அமைக்கவில்லை. எண்ணெய் கப்பல்களை தடுத்து நிறுத்தி வைப்பதற்காக துறைமுகங்களை நாம் அமைக்கவில்லை.
ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த வேளையில், அனைத்து வசதிகளையும் கொண்ட கொரோனா தொற்றுநோய் தடுப்பு நிலையங்களை அமைத்து, கொத்தமல்லி நீரிலிருந்து உணவு, மருந்து ஆகியவற்றை வழங்கி முழு நாட்டிற்கும் தடுப்பூசியையும் பெற்றுக்கொடுத்து மக்களின் உயிரை பாதுகாத்தது, கண்ணீர் புகைக்கும், துப்பாக்கி தோட்டாக்களுக்கும் மக்களை பலி கொடுப்பதற்கல்ல.
நம் நாட்டின் அனைத்து பிரச்சினைகளின் போதும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்த அரசியல் வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்.
இந்த நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.
பொதுமக்களுடன் இணைந்து தைரியமாக பணியாற்றி, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே வெளிநாடுகளிலிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதை இந்த அரசாங்கம் மட்டுப்படுத்தியது.
மிகவும் இக்காட்டான சூழ்நிலைகளிலும் வெளிநாடுகளிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்து உதவிகளை பெற்றுக்கொள்வதற்கே நாம் எப்போதும் முயற்சித்தோம்.
அதனால் தான், பாரிய அளவு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் பொதுமக்களின் ஆணைக்கு மதிப்பு கொடுத்து அவற்றை நாம் மேற்கொள்ளாமல் இருந்தோம்.
இந்நாட்டின் ஜனநாயக ஆட்சி முறையை சிதைக்காத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்வதே மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த எமது பொறுப்பாகும்.
அந்த நோக்கத்திற்காகவே நாம் தொடர்ந்தும் சேவையாற்றிகொண்டு இருக்கின்றோம். கிடைக்காமல் போவதும், கைவிடுவதும் கூட அரசியலில் எமக்கு மிகவும் பழக்கப்பட்டதொரு விடயமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் வேண்டாம் என்ற மக்களின் கோஷம் எமக்கும் கேட்கின்றது. அதனூடாக கூறவருவது, இந்த ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான வரலாற்றை நோக்கி புரிந்துகொள்ள வேண்டும். பாராளுமன்றத்துக்கு குண்டுவீசி முழு பாராளுமன்றத்தையும் அழிப்பதற்கான முயற்சியினால் ஏற்பட்ட விளைவை நாம் கண்கூடாக கண்டுள்ளோம்.
அன்று பாராளுமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்டதன் விளைவால், வீதியெங்கிலும் இளைஞர்களின் இரத்தம் வழிந்தோடியது. டயர்களை கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
1988 மற்றும் 89 களில் 60ஆயிரத்துக்கும் அதிகமான இளம் உயிர்களை நம் நாடு இழக்க நேரிட்டது. அன்று நாம் எமது இளைஞர்களின் உயிர்களை காப்பதற்காக மேற்கொண்ட கஷ்டம் உங்கள் மூத்தோர்களின் நினைவிலிருக்கும் என்பதை நாம் அறிவோம்.
தெற்கு போன்றே வடக்கு இளைஞர்களுக்கும் நான் அது குறித்து ஞாபகப்படுத்த வேண்டும். அந்த கடந்த காலத்தை உங்களது பெற்றோர் மற்றும் மூத்தோர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம். பாராளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என்று மக்கள் பிரதிநிதிகளை வீதிகளில் கொன்றே, 1970-80 களில் வடக்கு இளைஞர்கள் ஆரம்பித்தனர்.
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இயக்கத்தினால் 30 ஆண்டு காலமாக வடக்கில் மட்டுமல்ல தெற்கு மக்களும் கஷ்டத்தை அனுபவித்தனர். கண்ணிவெடிகளுக்கும், துப்பாக்கி தோட்டாக்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அவர்கள் இருந்த அடையாளமே தெரியாது போனது.
கொஞ்சம் கொஞ்சமாக பாடசாலை மாணவர்களையும் போராட்டங்களுக்கு இழுத்து செல்ல ஆரம்பித்தனர். அடுத்ததாக, மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அன்றும் பாராளுமன்றம் வேண்டாம் என்றே ஆரம்பித்தார்கள். அவற்றின் விளைவை அறிந்தமையால், நீங்கள் பிறந்த நீங்கள் வாழும் இந்த நாட்டை மீண்டும் அந்த இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று அன்பார்ந்த பிள்ளைகளிடம் கேட்டுக் கொள்கிறோம்.
இன்று நாம் முகங்கொடுத்துள்ள நெருக்கடியை வெற்றி கொள்ள பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிட்டு வருகிறது.
வரலாற்றில் விவசாயிகளுக்கு அதிக சலுகைகளை வழங்கிய எமக்கு தற்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னதான் நாட்டிற்கு நல்லது என்றாலும் சேதனப் பசளை வேலைத்திட்டத்தை கொண்டு செல்ல இது சரியான தருணம் அல்ல. அதனால் நாம் மீண்டும் உர மானியத்தை வழங்க தீர்மானித்துள்ளோம்.
தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்று, கடதாசி பற்றாக்குறை வரை முகங்கொடுத்து வருகின்ற இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் முடியாவிடினும் கூடிய விரைவில் இந்த நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் பாதையை முடிவுக்கு கொண்டுவர நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
நீங்கள் வீதியில் போராடும் ஒவ்வொரு விநாடியும் எமது நாட்டிற்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாது போகின்றது. பாரிய மறுசீரமைப்பு செய்வதற்கு முதல் தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.
அதற்கு பலமுள்ள தைரியமுள்ள அனைவருக்கும் நாம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். உங்கள் அனைவரதும் பொறுமையும் தைரியமும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம்.
அன்று பீதியிலிருந்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது கால்களில் குத்திய மணல் கற்களைவிட அதிகமாக என் மீதும் எனது குடும்பத்தினர் மீதுமான அவமானங்களை இன்று நான் சந்திக்கிறேன். அவற்றை என்னால் தாங்கிக்கொள்ள முடியும்.
எனினும், நாட்டிற்காக சேவையாற்றும் முப்படையினரையும், பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களையும் அவமதிக்காதீர்கள். இன்று நீங்கள் சுதந்திரமாக பயமில்லாமல் வீதிகளில் பயணிப்பதும், எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவதும் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்து நாட்டை காப்பாற்றியமையினாலேயே ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதேபோன்று கொரோனா தொற்றிலிருந்து உங்களை காப்பாற்றுவதற்கும் இந்த இராணுவ வீரர்கள் போரடினார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
பிள்ளைகளே, உங்கள் எதிர்ப்பு போராட்டங்களில் தேசிய கொடியை வைத்திருப்பதை நான் காண்கிறேன். நாம் பிறந்த இந்த பூமியில் எந்தவொரு இடத்திற்கும் தேசிய கொடியை கொண்டு சென்று ஏற்றி வைப்பதற்கான நாட்டை நாம் உருவாக்கி கொடுத்தோம். அன்று அந்த சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது.