(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின் பின்னர் இடம்பெற்று வரும் நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் உட்பட 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்திருந்தனர்.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைமைக் கூட்டம் நடைபெற்றது.
தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இரண்டு முன்மொழிவுகள் இருக்கலாம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதாவது ஜனாதிபதி இராஜினாமா செய்துவிட்டு புதிய ஜனாதிபதி பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்படுவார் அல்லது இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும். எவ்வாறாயினும், அதற்கான எந்த ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.