உள்நாடு

2021.03.01 : அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

(UTV | கொழும்பு) –   2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 2018 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக தேடி ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

2019 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆணைப்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாகப் பங்களிப்புக்களுக்கான ஒப்பந்தம்

சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாகப் பங்களிப்புக்கள் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், மற்றும் சீனா உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட வர்த்தக இணை நாடுகள் பலவற்றுடன் இலங்கை ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய சட்டபூர்வமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு வசதியளித்தல், இரு நாடுகளுக்கிடையிலான செலவுகளைக் குறைத்தல், மற்றும் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில், அவ்வாறான ஒப்பந்தந்தை எட்டுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இருதரப்பினருக்கிடையில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சராக, கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வன்முறைகளின் போது பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தற்காலிக பாதுகாப்பு நிலையத்தை நிர்வகித்தல்

வன்முறைகளின் போது பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்காக வடக்கு, கிழக்கு, மேல், மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அமைந்துள்ள நிலையங்களின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதற்காக 2018 ஆம் ஆண்டு தொடக்கம் Women In Need (WIN) மற்றும் Jaffna Social Action Center (JSAC)போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் குறித்த பாதுகாப்பு நிலையங்களின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொடர்ந்து குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. ஆனமடுவ, தம்மென்னாகமவில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணி மற்றும் கட்டிடங்களை இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு ஒப்படைத்தல்

3.585 ஹெக்டயர் பரப்பளவைக் கொண்ட ஆனமடுவ, தம்மென்னாகமவில் அமைந்துள்ள கம் உதாவ காணி மற்றும் அனைத்து கட்டிடங்களையும் விசேட வழங்கல் அனுமதிப்பத்திரத்தின் மூலம் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தின் ஆனமடுவ பிராந்திய நிலையத்தை ஆரம்பிப்பதற்காக குறித்த காணி மற்றும் கட்டிடங்களை வழங்குமாறு குறித்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளதுடன், அதற்காக வீடமைப்பு அதிகாரசபையும் உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த காணி மற்றும் கட்டிடங்களை மீண்டும் அரசாங்கத்திற்கு கையகப்படுத்தி இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு விடுவிப்பு அனுமதிப் பத்திரத்தின் மூலம் ஒப்படைப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. ‘கிராமத்துடன் சுமூக உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அடையாளங் காணப்பட்ட மாத்தளை மாவட்டத்திலுள்ள வத்தேகெதர குளத்தை அமைத்தல்

மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவில் ஹிம்பிலியாகடவில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் சுமூக கலந்தரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்தில், ஹிம்பிலியாகட குளத்தின் மூலம் நீர் வழங்கப்படும் 1,300 ஏக்கர்களுக்கான நீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாகவும் மற்றும் புதிதாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளக் கூடிய 1,010 ஏக்கர்களுக்கு நீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட வறுமைப்பட்ட மக்களுக்கு உயர்ந்த வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கெம்புறு ஓயா ஊடாக வத்தேகெதர குளம் மற்றும் தொடங்கொல்ல குளங்களைப் புனரமைத்து களுகங்கையின் வலதுகரை பிரதான கால்வாயில் இருந்து 1,800 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையூடாக வத்தேகெதர குளத்திற்கும், ஹிம்பிலியாகட குளத்திற்கும் நீர் வழங்கக் கூடிய வகையில் நீர்ப்பாசனத் திணைக்களம் கருத்திட்டமொன்றைத் தயாரித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு 7,155 மில்லியன் ரூபாய்களாவதுடன், கட்டுமானப் பணிகளை 2021-2023 மூன்றாண்டு காலப்பகுதியில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நீர்ப்பாசன திணைக்களத்தின் இயந்திர உபகரணங்களைப் பயன்படுத்தியும் இலங்கை இராணுவத்தினரதும் பிரதேசவாசிகளின் உழைப்புப் பங்களிப்பில் 2021 ஆம் ஆண்டில் வத்தேகெதர குளத்தை அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியை 2021-2023 காலப்பகுதிக்கான ஒருங்கிணைந்த வரவு செலவில் ஒதுக்கிக் கொள்;வதற்கும், நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. அழிவாக்கமற்ற பரிசோதனை சான்றுப்படுத்தல் நிறுவனத்தை, அழிவாக்கமற்ற பரிசோதனை சான்றுப்படுத்தல் தேசிய நிறுவனமாக பெயரிடல்

அழிவாக்கமற்ற பரிசோதனை சான்றுப்படுத்தல் நிறுவனம், ஆழிவாக்கமற்ற பரிசோதனை பயிற்சிகள் மற்றும் பரிசோதனை சேவைகளை ஊக்குவிப்பதுடன், சர்வதேச தரநியமங்களுக்கமைய பரிசோதனை தகைமைகள் மற்றும் நபர்களை சான்றுப்படுத்துவதற்காக இலங்கை அணுசக்தி சபையின் கீழ் சுயாதீன நிறுவனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அழிவாக்கமற்ற பரிசோதனை பயிற்சி மற்றும் சான்றுப்படுத்தல்களுக்காக சர்வதேச ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து நாடுகளிலும் அழிவாக்கமற்ற பரிசோதனை சான்றுப்படுத்தல் தேசிய நிறுவனத்தை தாபித்தல் வேண்டும். அதற்கமைய, தற்போது நிறுவப்பட்டுள்ள அழிவாக்கமற்ற பரிசோதனை சான்றுப்படுத்தல் நிறுவனத்தின் பெயரை ‘அழிவாக்கமற்ற பரிசோதனை சான்றுப்படுததல் தேசிய நிறுவனம்’ என மாற்றுவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கையில் இறப்பர் செய்கை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கைத்தொழில் அபிவிருத்திகளுக்கான குழுவொன்றை நியமித்தல்

மோசமடைந்துள்ள கொவிட் 19 நிலைமையில் இறப்பரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கைக்கவசங்கள் உள்ளிட்ட ஏனைய சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களுக்கான உலகளாவிய கேள்வி பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், எமது நாட்டின் இறப்பர் உற்பத்தி பொருட்களுக்குத் தேவையான பதனிடப்படாத இறப்பர் உற்பத்தியுடன் தொடர்புபட்ட இறப்பர் உற்பத்தி கைத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நேரடியாகத் தொடர்புபடும் அரச மற்றும் தனியார் இறப்பர் துறையை வலுவூட்டி இறப்பர் செய்கையாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி செயற்படும் ஒருங்கிணைப்புக் குழுவை நியமிப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை இறப்பர் துறையின் பெறுமதியை சரியான செயன்முறையின் மூலம் முன்கொண்டு செல்வதற்கும், கொள்கை ரீதியான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைப்பதற்கும் பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளரின் தலைமையில், ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய ‘இறப்பர் செய்கை மற்றும் கைத்தொழில் அபிவிருத்திக்கான உள்ளக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழு’ எனும் பெயரில் குழுவொன்றை நியமிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. காலி, அக்மீமன பிரதேசத்தில் முன்மொழியப்பட்டுள்ள கண்டல்தாவர தாவரவியல் பூங்காவை நிறுவுதல்

அக்மீமன பிரதேச செயலகப் பிரிவில் நூகதூவ கிராம அலுவலர் பிரிவில் பின்னதூவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகாமையில் 26.71 ஹெக்ரயார் நிலப்பரப்பில் தேசிய தாவரவியல் பூங்காவை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டல்தாவர பாதுகாப்புக்காக (ex-situ conservation) தேசிய தாவரவியல் பூங்கா உள்ளடங்கலாக எந்தவொரு நிறுவனமும் இதுவரை இயங்கவில்லை என்பதால், கண்டல்தாவர தாவரவியல் பூங்காவை நிறுவுவதன் மூலம் குறித்த குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம். அதேபோல், குறித்த முன்மொழியப்பட்டுள்ள பூங்காவை நிறுவுவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், கண்டல்தாவரங்கள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வாய்ப்புண்டு. அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கண்டல்தாவர தாவரவியல் பூங்காவை நிறுவுவதற்காக சுற்றுலாத்துறை அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கான கடன் வசதியளிப்பதற்கான சுயசக்தி கடன் திட்டத்தை திருத்தம் செய்தல்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கான கடன் வசதியளிப்பதற்கான சுயசக்தி கடன் திட்டத்தை திருத்தம் செய்து மேற்கொள்வதற்காக 2020 ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடன்களில் 58% வீதமானவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வியாபாரங்களுக்காவும், 42% வீதமானவை புதிய வியாபாரங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கடன் திட்டத்தின் கீழ் புதிய உற்பத்திகள் அல்லது சந்தை அபிவிருத்தியை மேற்கொண்டு வியாபார மேம்பாடுகளில் ஈடுபடும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தற்போது மேற்கொண்டு வரும் வியாபாரங்களுக்காக சுயசக்தி கடன் திட்டத்தின் கீழ் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்பு வழங்குவதற்காகவும், அதன்கீழ் 02 மில்லியன்கள் அதிகபட்ச கடன் வசதியை வழங்குவதற்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மூன்று வருடகால திட்டம்

இலங்கையின் நீதி முறைமைப் பொறிமுறையில் காணப்படும் தாமதங்கள் நாட்டின் சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவதில் சவாலாக உள்ளது. சர்வதேச குறிகாட்டிகள் பலவற்றில் இந்நிலைமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அது வெளிநாட்டு முதலீடுகளுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக நீதித்துறைக்கு போதுமானளவு மனித வளம் மற்றும் பௌதீக வளங்களை வழங்கல், நவீன தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தல், பிணக்குகளை தீர்க்கும் மாற்றுப் பொறிமுறைகளை வலுப்படுத்தல் மற்றும் தேவையான சட்டங்களைத் திருத்தம் செய்தல் அவசியமாகவுள்ளது. அதற்கமைய, நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மூன்றாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 20,000 மில்லின் ரூபாய்களை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட விடதானங்கள் 06 இன் கீழ் நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. பெறுகைக் குழுக்களிலுள்ள அதிகார எல்லைகளைத் திருத்தம் செய்தல்

பொதுமக்களுக்கு துரித வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் கருத்திட்டங்கள் பல 2021-2023 ஒருங்கிணைந்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்காக அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் தற்போது காணப்படும் ஒப்பந்தம் வழங்கலுக்கான அதிகார எல்லைகளை பெருந்தெருக்கள், நீர்ப்பாசனம், நீர்வழங்கல், மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் நகர அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களின் விடயதானங்களுக்கமைய அதிகரிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. கெக்கிராவ – தலாவ – கனேவல்பொல – தச்சிஹல்மில்லாவ வீதியை புனரமைத்தல், மேம்படுத்தல் மற்றும் பராமரித்தலுக்கான சிவில் வேலைகளுக்கான 06 ஒப்பந்தங்களை வழங்கல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையுடன் ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமத்திய மாகாணத்தின் கெக்கிராவ – தலாவ – கனேவல்பொல – தச்சிஹல்மில்லாவ வீதியை புனரமைப்பதல், மேம்படுத்தல் மற்றும் பராமரித்தலுக்காக சிவில் வேலைகளுக்கான 06 ஒப்பந்தங்களுக்கான போட்டி விலைமுறி மனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தங்களை வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1928 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க தாவரவியல் பூங்கா கட்டளைச் சட்டத்தை நீக்கம் செய்து புதிய சட்டத்தை கொண்டுவரல்

1973 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க திருத்தப்பட்ட 1928 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க தாவரவியல் பூங்கா கட்டளைச் சட்டம் தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் செயற்பாடுகளை முக்கியமாக உள்ளடக்குகின்றன. 90 வருடங்கள் பழமையான குறித்த கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இளைஞர் படையணி சட்டத்தை முடிவுறுத்தி இளைஞர் படையணி அதிகாரசபையை நிறுவுதல்

2002 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இளைஞர் படையணி சட்டத்தை முடிவுறுத்தி இளைஞர் படையணி அதிகாரசபையை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2011 திசம்பர் மதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டாலும், அதுதொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், 2002 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இளைஞர் படையணி சட்டத்தை முடிவுறுத்தி இளைஞர் படையணி அதிகாரசபையை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக திருத்தங்களை உள்வாங்கி குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. தண்டனைச் சட்டக் கோவையின் 285,286 மற்றும் 286அ உறுப்புரைகளை முடிவுறுத்தல்

ஆபாச வெளிப்பாடுகளத் தடை செய்யும் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1927 ஆம் ஆண்டு ஆபாச வெளிப்பாடுகள் கட்டளைச் சட்டம் முடிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தண்டனைச் சட்டக்கோவையின் 285,286 மற்றும் 286அ உறுப்புரைகளின் நடைமுறைகளும் அவசியமற்றதாகும். அதற்கமைய, தண்டனைச் சட்டக் கோவையின் குறித்த உறுப்புரைகளை முடிவுறுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. 2021-01-12 அன்று இடம்பெற்ற அரசிலமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுக் கூட்ட அறிக்கை

கீழ்க்காணும் சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கு ஏற்புடையவாறான கொள்கைப் பத்திரத்தை பரிசீலனை செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அரசியலமைப்பு தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த உப செயற்குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவின் தலைவராக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• குற்றச் செயலொன்றின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் பாதுகாப்பளித்தல் சட்டத்திற்குப் பதிலாக புதிய அரசியலமைப்பை விதித்தல்

• முஸ்லிம் திருமணம் மற்றும் மணநீக்க (திருத்த) சட்டமூலம்

• தண்டனைச் சட்டக்கோவையின் (19 ஆம் அத்தியாயத்தின்) (மனித கௌரவம் மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதுகாத்தல், போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பான பேச்சுக்கள்)

• 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு நடைமுறைக் கோவை சட்டத்திற்கான திருத்தம் (மனித கௌரவம் மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதுகாத்தல், போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பான பேச்சுக்கள்)

17. இலங்கை அதிபர் சேவை தரம் iii இற்கான ஆட்சேர்ப்பு

தற்போது இலங்கை அதிபர் சேவை I, IIமற்றும் III தங்களில் 4,600 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையால் போட்டிப்பரீட்சை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி முறையாக பதவி நியமனங்களை வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது நீணடகாலமாக அதிபர் பதவியில் பதில் கடமைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் சேவையில் தகைமை பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை யாப்பிற்கமைய தகைமைகளைப் பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சேவையிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கி இச்சந்தர்ப்பத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும், இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனங்களை வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. 2020 நிதி ஆண்டின் இறுதியில் நிரல் அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை

2018 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய மூலதன வரவு செலவின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக அறிக்கை நிதி அமைச்சால் காலாண்டு அடிப்படையில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கமைய, 2020 அம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய கருத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை நிதி அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் தகவல்கள் குறித்த அறிக்கை மூலம் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

• 2020 ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ஒரு பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான 289 அபிவிருத்திக் கருத்திட்டங்கள், 40 நிரல் அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

• குறித்த கருத்திட்டங்களுக்காக 710 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் 72% வீதமான நிதி முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

• குறித்த 289 அபிவிருத்திக் கருத்திட்டங்களின் தொடர் நடவடிக்கைகளுக்காக அண்ணளவாக 2.9 ரில்லியன் ரூபாய்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.

• குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தடைகள் ஏற்பட்டுள்ளதுடன், கருத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக பணியாளர் குழாமிற்கு 08 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டிருந்தாலும், சில கருத்திட்டங்களில் குறித்த அங்கீகரிக்கப்பட்ட செலவுகள் மற்றும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றத்தை அடைய முடியவில்லை என்பதை அறிக்கை மூலம் அவதானிக்க முடிகின்றது.

• சில கருத்திட்டங்களுக்கான முன் ஏற்பாட்டு காலப்பகுதியில் இருந்து சிற்சில குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களக்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தாமங்கள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக உள்ளன.

நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைக் கருத்தில் கொண்டு, பாரியளவிலான மூலதன கருத்திட்டங்கன் தொடர்பாக மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் குறித்த தரப்பினரிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் சிறப்பாகவும் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெற்றுக்கொள்வதற்காகவும் மாதாந்த முன்னேற்ற மீளாய்வு நடாத்துவதற்காக நிதி மற்றும் மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரின் தலைமையிலும் சிரேஷ்ட செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

19. கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டம் – மேற்கு கொள்கலன் முனையம் (WCT) அபிவிருத்தி செய்தல் மற்றும் நடவடிக்கைகள்

கொழும்பு தெற்கு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் (WCT) இந்திய அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தால் பெயரிடப்படும் தரப்பினர்கள் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அரச – தனியார் வர்த்தகமாக அபிவிருத்தி செய்வதற்கும், அது தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை மதிப்பீடு செய்வதற்காகவும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு மற்றும் கருத்திட்ட குழுவொன்றை நியமிப்பதற்கும், 2021 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு, நிர்மாணித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீளக்கையளிக்கும் ஒப்பந்தம் மற்றும் யோசனை விண்ணப்பங்கள் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஜப்பான் தூதுவராலயத்திற்கு சமர்ப்பித்து முதலீட்டாளர்களை குறித்துரைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கமைய, Adani Ports and Special Economic Zone Limited (APSEZ Consortium) சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஜப்பான் அரசாங்கத்தால் எந்தவொரு முதலீட்டாளரும் குறித்துரைக்கப்படவில்லை. இருதரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய Adani Ports and special economic Zone Limited (APSEZ Consortium) மற்றும் உள்ளுர் பிரதிநிதியான John Keels Holdings PLC (APSEZ Consortium) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து அரச – தனியார் வர்த்தகமாக 35 வருடங்கள் அபிவிருத்தி செய்து, நடைமுறைப்படுத்தி, மீளக்கையளித்தல் அடிப்படையில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் கொவிட் தடுப்பூசிகள்