உள்நாடு

2021.01.25 : அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

(UTV | கொழும்பு) – 

01. ஜனாதிபதி நிதியம் தொடர்பான கணக்காய்வாளர் அறிக்கை – 2018

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154(3) அரசியலமைப்புடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க ஜனாதிபதி நிதிய சட்டத்தின் 9(2) உறுப்புரைக்கமைய 2018 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த இறுதி நிதி ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியம் கணக்காய்வாளர் நாயகம் அவர்களால் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிதிய சட்டத்தின் 10 ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய 2018 நிதியாண்டுக்கான குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்டு மிகவும் பாதுகாப்பான வாழ்விடத்தை உரித்தாக்குவதற்காக தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்தல்

தோட்ட தொழிலாளர்களுக்கு லயின் அறைகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தோட்ட வீடமைப்பு முறைமை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பொறிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கத்தின் அனுசரணையுடன் 7 பேர்ச்சர்ஸ் காணி உறுதியுடன் கூடிய 550 சதுர அடிகளைக் கொண்ட வீடமைப்பு மற்றும் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களுடன் 550 சதுர அடிகளைக் கொண்ட 02 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இம்முன்மொழிவுத் திட்ட முறைமையின் கீழ் வீடுகளை வழங்கும் போது பின்பற்றுகின்ற நடைமுறைகள் மாறுபடுகின்றமையால் ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளதால், தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது பொதுவான ஒரு பொறிமுறையைப் பின்பற்றுவதற்கும், அதற்கமைய கீழ்க்காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தற்போதுள்ள லயின் அறைகளை அகற்றி குறித்த இடத்திலேயே புதிய வீடுகளை அமைத்தல்

• வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துக்கள் இருப்பின், மற்றும் லயின் அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இடவசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடமைப்பை நிர்மாணித்தல்

• பிற்காலத்தில் குறித்த வீடுகளை இருமாடி வீடுகளாக நிர்மாணிக்கக் கூடிய வகையில் 550 சதுர அடிகளைக் கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்திற்காக 1.3 மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணித்தல்

• கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்திற்காக மேலதிகமாக 03 பேர்ச்சர்ஸ் காணியை ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ஒதுக்கி வழங்கல்

• வீடமைப்பிற்கான பெறுமதியின் 50மூ வீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதற்கும், அதற்காக 20 வருடகாலம் வழங்குதலும்

• லயின் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரைக்கும் வேறு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல்

03. தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளக் கொடுப்பனவை அதிகரித்தல்

‘2019-2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்’ ஏற்பாடுகளுக்கமைய 50/- ரூபா நிலையான விலைக் கொடுப்பனவு உள்ளிட்ட 750/- ரூபா நாளாந்த சம்பளமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் நியம கிலோகிராம் அளவு அதிகரிக்குமாயின் ‘Over Kilo Rate’ எனும் பெயரில் மேலுமொரு கொடுப்பனவுடன் சேர்த்து தோட்டத்தொழிலாளர்கள் தற்போது சம்பளமாகப் பெற்று வருகின்றனர்.

2020 நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்தச் சம்பளமாக 1000/- ரூபா வழங்குவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக ‘2019 – 2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில்’ கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும், குறித்த கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினரான பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை முதலாளிமார் சம்மேளனம் நாளாந்த சம்பளத்தை 920/- ரூபா வரை அதிகரிப்பதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பளக் கட்டுப்பாட்டு சபை மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000ஃ- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. லிச்டென்ஸ்ரயின் அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தல்

சுவிஸர்லாந்து மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையே அமைந்துள்ள நிலப்பரப்பால் சூழ்ந்த சிறிய நாடான லிச்டென்ஸ்ரயின் அரசாங்கம், ஜனநாயக முறைமையைக் கொண்ட அரசியலமைப்பு ரீதியான அரசர் ஒருவரை அரச தலைவராகக் கொண்டமைந்த நாடாகும். குறிப்பாக, ஒளடதங்கள், துல்லியமான உபகரணங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை உற்பத்தி செய்யும் பாரிய கைத்தொழில் நாடாகவும் உலகில் செல்வந்த நாடாகவும் கருதப்படுகின்றது. கடந்த வருடம் அதன் மொத்த தேசிய உற்பத்தி 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாவதுடன், தனிநபர் வருமானம் 143,700 டொலர்களாகும். முன்னேற்றகரமான வங்கிக் கட்டமைப்புடன் கூடிய முதலீடுகளை கவர்ந்திழுக்கும், குறைந்த வருமானவரி முறைமையைக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார வலயத்தின் அங்கத்துவ நாடான லிச்டென்ஸ்ரயின், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடாக இருப்பதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அதிக நாடுகளுடன் உறவுகளைப் பேணுகின்றது. இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு மற்றும் ஒத்துழைப்புக்கள் இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டங்களில் மேம்படுத்திக் கொள்வதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் லிச்டென்ஸ்ரயின் நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இலங்கைக்கு முதலீடுகள் மற்றும் அதிகம் செலவிடக்கூடிய சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கு இயலும். அதற்கமைய, லிச்டென்ஸ்ரயின் அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. நீதிமன்றங்களின் கட்டுமானத் திட்டங்களுக்கான ஆலோசனைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்

நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்கிவரும் நீதிமன்றங்களில் அதிகளவு வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குத் தீர்வாக நீதிமன்ற நீதவான்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீதிமன்றங்களின் ஏனைய வசதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியதுடன், எதிர்வரும் 03 வருடங்களில் புதிய 100 நீதிமன்ற கூடங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்கீழ், பலமாடி நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை அமைப்பதற்கும் தற்போது காணப்படுகின்ற கட்டிடங்களை திருத்தியமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணிக்கும் அனுபவங்களைக் கொண்ட பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய பணியகத்திடமிருந்து தேவையான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. புதிய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி தொடர்பான சட்டம் வகுத்தல்

2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மூலம் இலங்கையின் உள்ளூர் பெற்றோலிய வளங்கள் மற்றும் வாயுக்கள் பற்றிய ஆய்வு மற்றும் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் பரந்தளவில் அடையாளங் காணப்பட்டிருந்தாலும், குறித்த துறையின் முகாமைத்துவம் பொருத்தமான வகையில் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, ஏற்புடைய தரப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் குறித்த சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி தேவையான வரையறைகளை எடுத்துக் காட்டவும், ஒழுங்கபடுத்தல்கள், கொள்கைகள் மற்றும் தேசிய நடவடிக்கையாளர்களை வேறுபிரித்துக் காட்டுவதற்காக புதிய சட்டமொன்று தயாரிக்க வேண்டிய தேவையும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கு எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கையில் தெங்கு உற்பத்தித் துறையின் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளும் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒன்றிணைப்பதற்காக தெங்கு அபிவிருத்தி சட்டத்தை திருத்தம் செய்தல்

1971 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத்தின் கீழ், பயிர்ச்செய்கை, கைத்தொழில் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளுக்கு தெங்கு பயிர்ச்செய்கை சபை, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் போன்றன நிறுவப்பட்டுள்ளன. மேலும், 2005 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க கற்பகதரு நிதிய சட்டத்தின் மூலம் கற்பகதரு நிதிய முகாமைத்துவ சபை நிறுவப்பட்டுள்ளது. தெங்கு உற்பத்தித் தரக்கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பு செய்வதற்;கு ஏற்புடையதாக குறித்த நிறுவனம் தாபிக்கப்பட்டிருந்தாலும், சமகாலத்தில் குறித்த நிறுவனத்துடன் வினைத்திறனான ஒருங்கிணைப்புக்கள் இடம்பெறாமையால், சேவைபெறுநர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு சேவைகளை வழங்குவதற்கு இயலாமல் போயுள்ளது. குறித்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சில பணிகளை மீண்டும் மீண்டும் சேவைகளைப் பெறுவதற்காக சேவை பெறுநர்கள் பல நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருப்பதாலும், குறித்த நிறுவனத்தைக் கொண்டு நடாத்துவதற்கு அதிக செலவு ஏற்படுவதாலும் அவற்றைக் கருத்தில் கொண்டு குறித்த 04 நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக ஒன்றிணைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிறுவனங்களை ஒன்றிணைத்து ‘தெங்குப் பயிர்ச்செய்கை மற்றும் தெங்கு கைத்தொழில் அதிகாரசபை’ எனும் பெயருடன் புதிய நிறுவனத்தை தாபிப்பதற்கு இயலுமான வகையில் 1971 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க தெங்கு அபிவிருத்திச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலங்கையில் முதலாவது மின் உற்பத்தி – களஞ்சிய நீர் மின் உற்பத்தி நிலையம் (Pumped storage Hydropower Plant) நடைமுறைப்படுத்துவதற்காக சாத்தியவள ஆய்வை மேற்கொள்ளல்

ஒரு சில மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களால் மின் உற்பத்தி செய்யும் போது ஏற்படும் விலகல்கள்; மற்றும் நிலையற்ற தன்மையைக் கொண்டிருப்பதால் அவ்வாறான எரிசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் பிரதான மின்வலுக் கட்டமைப்புடன் அதிகமாக இணைத்து இயங்கும் போது தொழிநுட்ப ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அந்நிலைமையை எதிர்கொள்வதற்காகவும், மேலதிக மின் உற்பத்தி கொள்ளவை களஞ்சியப்படுத்துவதற்காகவும், ‘மின் உற்பத்தி – களஞ்சிய நீர் மின் உற்பத்தி நிலையம் (Pumped storage Hydropower Plant) இனை நிறுவுவதன் தேவை கண்டறியப்பட்டுள்ளது. 2018 – 2037 நீண்டகால மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் மின் உற்பத்தியை களஞ்சியப்படுத்தும் நீர் மின் உற்பத்தி நிலையத்தை 03 கட்டங்களாக 2025 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் (JICA) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கு அமைய முன்மொழியப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மாஓய பள்ளத்தாக்கின் அரநாயக்க பிரதேசம் மற்றும் கண்டி வௌதென்ன பிரதேசமும் பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது. குறித்த இரு பிரதேசங்களில் மிகவும் பொருத்தமான பிரதேசத்தை அடையாளங் கண்டு அது தொடர்பான முழுமையான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ள வேண்டுமென்பதே மின்சார சபையின் கருத்தாகும். அதற்குத் தேவையான நிதி ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாடுகளுக்கான முதலீட்டு கருத்திட்டத்தின்’ எஞ்சியுள்ள நிதியில் பெற்றுக் கொள்வதற்கு இயலும். அதற்கமைய குறித்த கருத்திட்டத்திற்கான முழுமையான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்வதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. வெளிவட்ட பெருந்தெருவுக்கு அத்துருகிரியவில் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை (Elevated Expressway) அமைத்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையுடன் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் துறைமுக உட்பிரவேச அதிவேக நெடுஞ்சாலை ஊடாக புதிய களனிப் பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சாத்தியவள ஆய்வுக்கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, நிர்மாணித்து நடாத்திச் சென்று ஒப்படைத்தல் (BOT) எனும் அடிப்படையில் 100% வீதம் வெளிநாட்டு நிதியுடன் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு விண்ணப்பங்களை (RFP) கோருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. ப்ளுமென்டல் பிரதேசத்தின் முன்மொழியப்பட்ட துறைமுகஞ்சார் சேவைகளை வழங்குவதற்கான விநியோகப் பிரிவை அபிவிருத்தி செய்தல்

கொழும்பு துறைமுகத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக வினைத்திறனுடன் கூடிய அதிகரித்துவரும் கேள்விக்கு ஏற்புடைய வகையில் கொழும்பு துறைமுகத்தின் சேவை வழங்கல் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான உடனடித் தேவை இலங்கை துறைமுக அதிகார சபையால் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ப்ளுமென்டல் பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் கூடிய துறைமுகஞ்சார் சேவைகளை வழங்குவதற்கான விநியோகப் பிரிவை தாபிப்பதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை எதிர்பார்க்கின்றது. குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக நடுத்தர கொள்கலன்கள், முழுமையான கொள்கலன்கள், பல்வேறு நாடுகளுக்குச் சொந்தமான மீள் ஏற்றுமதி கொள்கலன்கள், குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள், சிற்றிடைவெளிக் கப்பல் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய துறைமுகஞ்சார் சேவை விநியோகத்திற்காக பாரிய கொள்கலன் களஞ்சியத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நிர்மாணித்து நடாத்திச் சென்று ஒப்படைத்தல் (BOTஎனும் அடிப்படையில் அரச – தனியார் பங்குடமை கருத்திட்டமாக முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான முதலீட்டாளர்/முதலீட்டாளர்களை அடையாளங் காண்பதற்கு இயலுமான வகையில் முன்மொழிவு விண்ணப்பங்களைக் கோருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. குருவிட்ட எரத்ன ஸ்ரீபாத வீதியை புனரமைத்தல்

ஸ்ரீபாத தரிசிப்புக்காக பக்தர்கள் பயணிக்கும் மூன்று பிரதான பாதைகளில் குருவிட்ட – எரத்ன வீதியை ஸ்ரீபாத உற்சவ காலங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வீதியில் இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ள படிகள் நீண்டகாலமாக சீரமைக்கப்படவில்லை என்பதால், பக்தர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அதனால், குருவிட்ட – எரத்ன வீதியில் இனங்காணப்பட்டுள்ள இடங்களை புகையிரதப் பாதைகள் புனரமைக்கப்படும் போது அகற்றப்படும் தண்டவாள மரக்குற்றிகளை பயன்படுத்தி புனரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றம் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சோடியம் குளோரைட் அகக்கூட்டுயிர் திரவம் பிஜி0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் ஊசிமருந்து யூஎஸ்பி 0.9% w/v 500 மில்லிலீற்றர் போத்தல்கள் 14,000,000 இற்கான பெறுகை

நோயாளிகளின் குருதியின் அளவு குறைவடையும் சந்தர்ப்பங்களில் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இம்மருந்திற்கான பெறுகைக்கு சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த விலைமனுக் கோரல் M/s Sichuan Kelun Pharmaceutical Co. Ltd, நிறுவனத்திற்கு பொதியனுப்பல் உள்ளிட்ட மொத்தச் செலவாக 2.79 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக சகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கட்டுநாயக்கா கைத்தொழில் பேட்டையை அமைத்தல்

மேல்மாகாணத்தில் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக கிட்டத்தட்ட 150 முதலீட்டாளர்கள் கைத்தொழில் அமைச்சுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதுடன், அதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் 30,000 மில்லியன் ரூபாய்கள் முதலீட்டின் கீழ் 11,500 தொழில் வாய்ப்புக்கள் உருவாவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மேல்மாகாணத்தில் 08 கைத்தொழில் பேட்டை நிலையங்கள் காணப்படுவதுடன், அவை முழுமையான இயலளவுடன் இயங்கி வருகின்றன. அதனால், மேல்மாகாணத்தில் புதிய கைத்தொழில் பேட்டையை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. அதற்கமைய, ஆடைக்கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி இறப்பர், ப்ளாஸ்ரிக், மருந்து உற்பத்திகள், மின் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள், பொதியிடல், பெறுமதி சேர் விவசாய உற்பத்திகள் மற்றும் திண்மக்கழிவு மீள்சுழற்சி கைத்தொழில் போன்றவற்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கட்டான பிரதேச செயலகப் பிரிவில் அரசாங்கத்திற்குச் சொந்தமான கலுதியவலவத்த பெயருடைய காணியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுநாயக்க கைத்தொழில் பேட்டையை அமைப்பதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

அந்நிய செலாவணியின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய ஒருசில இறக்குமதிப் பொருட்களை மட்டுப்படுத்துவதற்கும் முறைமைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2021 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட கட்டளைகள் மற்றும் தரநியமங்களைத் திருத்தம் செய்தல்

2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையைக் கேட்டறிந்து, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக கட்டளைகளை வெளியிடும் அதிகாரம் நிதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க, 2017 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க மற்றும் 2017 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், சட்டத்தின் 08 ஆம் உறுப்புரை மற்றும் 31 ஆம் பிரிவின் கீழ் தயாரிக்கப்பட்ட தரநியமங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த கட்டளைகள் மற்றும் தரநியமங்கள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கிழ்க்காணும் கட்டளைகளை வெளியிடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

i. 2021 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க அந்நிய செலாவணி (இலங்கைவாழ் நபர் ஒருவர் இலங்கைக்கு வெளியே மேற்கொள்ளும் மூலதன பரிவர்த்தனை வகைகள்) கட்டளைகள்

ii. 2021 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க அந்நிய செலாவணி (இலங்கைவாழ் நபர் ஒருவர் இலங்கையில் மேற்கொள்ளும் மூலதன பரிவர்த்தனை வகைகள்) கட்டளைகள்

iii. 2021 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க அந்நிய செலாவணி (புலம்பெயர்ந்தவர்களால் பணம் அனுப்புதல்) கட்டளைகள்

iv. 2021 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க அந்நிய செலாவணி (மூலதனப் பரிவர்த்தனை வகைகள்) கட்டளைகள்

v. 2021 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க அந்நிய செலாவணி (அந்நிய செலாவணிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக கணக்கு திறத்தல் மற்றும் பேணுதல்) கட்டளைகள்

• குறித்த சட்டத்தின் 08 ஆம் உறுப்புரை மற்றும் 31 ஆம் உறுப்புரைக்கு ஏற்புடைய வகையில் கட்டளைகளைத் தயாரித்தல்

16. இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு Astrazeneca’s COVISHIELD 500,000 ஊசிமருந்துகள் வழங்கல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவு மற்றும் கொவிட் 19 தொற்று நிலைமைக்கு முகங்கொடுக்கும் போது கடந்த ஒருவருட காலத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Astrazeneca’s COVISHIELD 500,000 ஊசிமருந்துகளை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த ஊசிமருந்துத் தொகை இம்மாதம் 28 ஆம் திகதி நாட்டிற்கு தருவிக்கப்பட இருப்பதை, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்திருப்பதுடன், அதனை கௌரவ அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதுடன், அதுதொடர்பாக இலங்கை அரசாங்கம் பாராட்டையும் நன்றிகளையும் தெரிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹிந்த மீது சஜித் குற்றச்சாட்டு…

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

பௌத்த சமயம் உலகவாழ் மக்களுக்கு சொந்தமானது