உள்நாடுவணிகம்

2020ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய சேமிப்பு வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை, வங்கியின் தலைவர் கேஷிலா ஜயவர்தனவினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (16) கையளிக்கப்பட்டது.

2019 டிசம்பர் 31ஆம் திகதிக்கு 1.2 டிரில்லியன் ரூபாயாக காணப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த சொத்து அமைப்பு 17.8 சதவீத வளர்ச்சியுடன் 2020 டிசம்பர் 31ஆம் திகதிக்கு 1.4 டிரில்லியன் ரூபாயாக காணப்படுகிறது.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதார செயல்முறையின் முன்முயற்சி காரணமாக 2020 ஆம் ஆண்டில் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த வரிக்கு முந்தைய மற்றும் பிந்தைய இலாபங்களை அடைவதற்கு தேசிய சேமிப்பு வங்கிக்கு முடிந்துள்ளது.

அதற்கமைய 2019ஆம் ஆண்டு பதிவான 10.5 பில்லியன் ரூபாய் மதிப்புடன் ஒப்பீட்டளவில் 49.5 சதவீத வளர்ச்சியுடன் 15.6 பில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபமும், முந்தைய ஆண்டில் பதிவான 6.4 பில்லியன் ரூபாய் மதிப்புடன் ஒப்பீட்டளவில் 58.4 சதவீத வளர்ச்சியுடன் 10.1 பில்லியன் ரூபாய் வரிக்கு பிந்தைய இலாபமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த கடன் சலுகைகளின் 90 சதவீதம் 7 சதவீத சலுகை வட்டி விகிதம் மற்றும் சம்பந்தப்பட்ட கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கு சலுகை காலம் வழங்குதல் ஆகிய கடன் நிவாரணங்களை கொண்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக நிலவும் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியிலும் 2021ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் தொடர்ச்சியான மற்றும் வலுவான செயல்திறனை தேசிய சேமிப்பு வங்கியினால் பதிவு செய்ய முடிந்தது.

அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான கடன் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை இதுவரை பூர்த்தி செய்துள்ளதுடன், வீடமைப்பு கடன் மற்றும் தனிநபர் கடன் வழங்குதலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கேஷிலா ஜயவர்தன தெரிவித்தார்.

அரச சேவையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட கடன் திட்டமொன்றும் தேசிய சேமிப்பு வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 6.75 சதவீத நிவாரண வட்டி அடிப்படையில் 15 ஆண்டுகளில் செலுத்தி முடிக்கும் வகையில் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது

சீரற்ற வானிலை – ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

editor