(UTV | கொழும்பு) – மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி) உள்ளிட்ட மூவரை குற்றமற்றவர்களாகக் கருதி விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் இரத்தினபுாியில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுாி மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பு தொடர்பில் பிரதிவாதிகள் சார்பில் பிரதி மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான தீர்ப்பை இன்று அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜித தர்ஷன ஆகியோர் இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளனர்.