உள்நாடு

எரிபொருள் விலையேற்றத்தினால் திண்டாடும் முச்சக்கரவண்டி சாரதிகள்

(UTV | கொழும்பு) – லங்கா ஐஓசி நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் பெற்றோலின் விலை லீற்றருக்கு 49 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தமது நாளாந்த வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

குறிப்பாக லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு காணப்படும் சூழலில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமையானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இம்மாதத்தில் மேற்கொண்ட பாரியளவு விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றினால் தாம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், எவ்விதமான முன்னறிவித்தலுமின்றி மீண்டும் இந்த விலை ஏற்படுத்தப்பட்டுள்ளமையானது, நிலைமையை மேலும் மோசமாக்கும் என அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக பெருமளவான வாகன சாரதிகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடுகின்றனர், இதனால் அந்த நிரப்பு நிலையங்களில் விரைவில் எரிபொருள் தீர்ந்துவிடுகின்றன. இந்நிலையில், எவ்வாறு நாம் சவாரிகளிலிருந்து வருமானமீட்டுவது? எந்த விலையிலிருந்து ஆரம்பிப்பது? விலைவாசி அதிகரிப்பால் பொது மக்கள் ஏற்கனவே பெருமளவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதை நாம் அறிவோம். அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக சுமார் 850,000 முச்சக்கர வண்டிச் சாரதிகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர் ஒன்றியத்தின் ஊடக செயலாளர் கபில கலபிடகே தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதைப் பற்றிக் குறிப்பிட்டனர். ஆனாலும் மக்கள் தற்போது பெருமளவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து, மரண விளிம்பில் உள்ளனர். இந்த அரசின் செயற்பாடுகளின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. இருந்த போதிலும், இந்த தினசரித் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தங்கியிருக்கும் ஒரு மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினரிடம் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.

Related posts

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

ஜனாதிபதி கெரவலப்பிட்டியவிற்கு திடீர் விஜயம்

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!