உள்நாடு

‘மக்கள் புரட்சிக்கு தலைமை ஏற்க தயார்’ – 18 அன்று பாரிய ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – தற்போதைய ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்வருவார்களாக இருந்தால், அதற்கு தலைமைத் தாங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக தெரிவித்த அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்சஜித் பிரேமதாஸவால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

 

 

“..74 வருடங்களாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மக்களின் நம்பிக்கையை முற்றாக இல்லாமல் செய்திருக்கின்றார்கள். அதனால், இன்று நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள்.

நாட்டில் உள்ள மக்கள் இந்தப் பிரதான இரு கட்சிகளையும் தேர்ந்தெடுப்பது கட்சிகள் மீது உள்ள நம்பிக்கையால் அல்ல. நீலக் கட்சி ஆட்சிக்கு வருகின்ற பொழுது பச்சை கட்சியை சார்ந்தவர்களின் வேலைவாய்ப்பை இல்லாமல் செய்வார்கள், சமூர்த்தி கொடுப்பனவை நீக்குவார்கள், அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்வார்கள்.

அப்போது மற்ற கட்சியினர் நினைப்பார்கள் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரட்டும் உங்களைப் பார்த்துக் கொள்கின்றோம் என்று. இவ்வாறான மனநிலையில் மக்கள் அவர்களின் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் இதே பணிதான் தொடரும். இவ்வாறுதான் நாட்டை ஆட்சி செய்த இந்த பிரதான கட்சிகள் நாட்டை சூறையாடி நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்றது மாத்திரமல்லாது எம்மை வெளிநாடுகளுக்கு கடனாளியாகவும் மாற்றி இருக்கின்றார்கள்.

எனவே, இந்த நிலைமை மாற வேண்டும். ஊழலற்ற வீண் விரயம் செய்யாத நேர்மையான நபர்களைக் கொண்ட ஆட்சி இப்போது நாட்டிற்கு தேவைப்படுகின்றது. அந்த ஆட்சியை சஜித் பிரேமதாச அவர்களுக்கு வழங்க முடியாது. ஏனென்றால், அவர்கள் பக்கம் இருப்பவர்கள் எல்லோருமே ஊழல்வாதிகளே! எனவேதான் நேர்மையாக அர்ப்பணிப்போடு நாட்டின் மீது பற்றுள்ள தேசிய மக்கள் சக்தியை ஆரம்பித்திருக்கிறோம்.

இன்று மக்கள் அனைவரும் இந்த ஊழலையும் வீண்விரயத்தையும் மாத்திரம் இல்லாமல் செய்தால் நாட்டை கட்டியெழுப்பலாமா என்று என்னை பார்த்து கேட்கின்றார்கள். நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன், ஊழல் வீண் விரயம் செய்பவர்களால் ஒரு நாளும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். எனவே, மக்களை வதைக்கும் இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் முன்வந்தால் அதற்கு தலைமை தாங்க நாங்கள் தயார். அதற்காக எதிர்வரும் 18ஆம் திகதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தலைநகருக்கு வாருங்கள் அதில் நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

1. இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

2. விலைவாசி அதிகரிப்பை உடன் நிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

3. எமது நாட்டின் வளங்களை வெளிநாட்டுக்கு விற்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளுடன் நாம் போராட்டத்திற்குத் தயாராக இருக்கின்றோம். எனவே, இதில் நாட்டு மக்களுக்கும் கடமை இருக்கின்றது. எமது நாட்டை மீட்டு எடுப்பதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மாத்திரமே எம்மால் சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்..” எனத் தெரிவித்தார்.

Related posts

பசில் மீண்டும் சேவையில்

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’