உள்நாடு

“நாட்டின் பிரச்சினைக்கு பிச்சை எடுப்பது தீர்வல்ல”

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு 200 மில்லியன் டொலர் அல்லது 300 மில்லியன் டொலர்களை வெளிநாட்டிடம் பிச்சை எடுப்பதன் மூலம் தீர்வு காண முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல், பெற்றோல், எரிவாயு, மருந்துகள்மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு திவால்தன்மையால் (வங்குரோத்து நிலைமையால்) ஏற்பட்டதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும், நாட்டை திவால்நிலையிலிருந்து காப்பாற்ற ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா;

“.. ஸ்பாட் சந்தையில் (Spot Market) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தற்போது 260-290 ஆக உள்ளது. இரண்டரை மில்லியன் டாலர்கள் வெறும் 260 ரூபாய்க்கு வியாபாரம் ஆனது என்று என்னால் பொறுப்புடன் சொல்ல முடியும். இந்த 230க்கு கொடுக்கப்பட்ட கதையின் அர்த்தம் என்ன? தொழிலாளர்களுக்கு மேலும் 20 ரூபாய் வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் கூறுகிறார். இங்கு என்ன நடந்துள்ளது. தயவு செய்து நிதியமைச்சரை இந்த பாராளுமன்றத்திற்கு வந்து விவாதித்து குறைந்த பட்சம் கருத்துக்களை முன்வைத்து எங்களின் கருத்துக்களை ஒப்பிட்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் பிளவு இல்லாமல் முடிவெடுக்க சொல்லுங்கள்.

இங்கு யார் கேட்டது நம் நாடு திவாலாகிவிட்டதா இல்லையா என்று? இதனை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார். நேற்று ஒன்றரை மணி நேரம் டீசல் வரிசையில் இருந்தேன். கடைசியில் என்னால் அதையும் எடுக்க முடியவில்லை. டீசல் இல்லை, பெட்ரோல் இல்லை, பால் இல்லை, எரிவாயு இல்லை, மருந்து இல்லை. இது திவாலா இல்லையா? மின்சாரம் இல்லை. மக்களுக்கு இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, திண்டாடுகிறார்கள்.

இதனை பேசுவதற்கு அமைச்சர் இல்லை. பேசுவதற்கு ஆள் இல்லை. திவால் அல்லது இல்லையா? இது திவாலாகவில்லை என்றால், திவால் என்றால் என்ன? திவாலானதா இல்லையா என்பதை நான் தொழில்நுட்ப ரீதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்துக்களின் இருப்பை பாருங்கள். கடவுளுக்கே வெளிச்சம். மத்திய வங்கி திவாலாகியுள்ளது. இதை நாங்கள் சொல்ல விரும்பவில்லை. நாடு திவாலாகி விட்டது என்று எப்படி வாய் திறந்து சொல்ல முடியும். நமக்கும் பெருமை உண்டு. எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி நாங்கள் இலங்கையர்களே. நாம் இந்த நாட்டில் பிறந்தோம். நாங்கள் இந்த நாட்டில் வாழ்கிறோம். இந்த நாட்டிலேயே நாம் மரணிக்கவுள்ளோம். எங்களிடம் வேறு கடவுச்சீட்டுக்கள் இல்லை. நாங்கள் இலங்கையர்கள். நாடு திவாலாகி விட்டது என்று எப்படி வாய் திறந்து சொல்ல முடியும். குறைந்தபட்சம் இந்த நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற இப்போதாவது ஒன்றுபடுவோம்.

நேற்று நானும் நாடாளுமன்ற உறுப்பினர் இரான், நாடாளுமன்ற உறுப்பினர் கபீரும் ஆளுநர் நிவார்ட் கப்ராலை சந்திக்க சென்றிருந்தோம். நாம் விவாதித்தோம்.. ஏனென்றால் எல்லாமே அரசியலாக இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே எங்கள் யோசனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். நவம்பர் 2020 இல், நான் இங்கு ஒரு மணிநேரம் பேசினேன். இந்த அரசு இரண்டு தவறுகளை செய்கிறது என்று கூறினேன். ஒன்று பணம் அச்சடிப்பது. மற்றொன்று, நாட்டை இறக்குமதி மாற்றுத் தொழிலுக்கு அழைத்துச் செல்வது. அந்த இரண்டையும் இன்று நாட்டில் செய்ய முடியாது. இன்று உலகில் உள்ள நாடுகள் அப்படி வளர்ச்சியடையவில்லை. நாம் உலகளாவிய சந்தையில் (Global Market) வாழ்கிறோம். இந்தப் பயணத்தை இவ்வாறு தொடர முடியாது என பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

$500 மில்லியன் செலுத்தும் முன் கடனை மறுகட்டமைக்கச் சொன்னோம். செலுத்த வேண்டிய பணம். 200-300 மில்லியன் டாலர்களை யாரிடமாவது பிச்சையெடுப்பதன் மூலம் நம் நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை இப்போது புரிந்து கொள்ளுங்கள்..” என்று அவர் தெரிவித்திருந்தார்.

  • ஆர்.ரிஷ்மா

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்.

சிறுநீரக நோயாளர்களின் உயிர்காக்கும் இயந்தியரத்தை, கிழக்கிற்கு வழங்கிய ஆளுநர் செந்தில்

வெள்ளவத்தை கோயிலை இடிக்க சரத் வீரசேகர ஆவேசம்