(UTV | யாழ்ப்பாணம்) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்குச் சென்று நேற்று (21) சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்டு சுமுகமாக உரையாடியதாக யாழ்.மக்கள் தெரிவித்திருந்தனர்.
திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தவர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் விஜயகலா மகேஸ்வரன் போட்டியிட்ட போதிலும் அவரால் ஒரு ஆசனத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்காக யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்தமை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது எனலாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.