(UTV | பிரேசில்) – பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் அதிக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தெருக்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் இடிந்து விழுந்தன.
நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரைக் காணவில்லை. அவர்களை மீட்புக் குழுவினர் தேடிவருகின்றனர்.
மீட்பு நடவடிக்கையில் பேரிடர் மீட்புகுழுவினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2011ம் ஆண்டு இதேபோன்று பெய்த தொடர் மழை காரணமாக பெட்ரோபோலிஸ் மற்றும் அருகில் உள்ள நகரங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 900க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.