காசா போர் நிறுத்தம் தொடர்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படும் நிலையில் நான்காவது சுற்று கைதிகள் பரமாற்றத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை (01) 183 பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில் ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை தொடர்வதோடு புதிய தாக்குதல்களில் மேலும் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் ஓர் அங்கமாக 34, 53 மற்றும் 65 வயது மூன்று பணயக்கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பினால் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகள் பஸ் வண்டிகளில் காசா மற்றும் மேற்குக் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகள் பலரும் இஸ்ரேல் சிறையில் சித்திரவதை மற்றும் பட்டினியில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக பலஸ்தீன கைதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதோடு இடிபாடுகளில் சிக்கி இருக்கும் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 27 சடலங்கள் மருத்துவமனைகளுக்கு கிடைத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் புதிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவர் மற்றும் முந்தைய தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் உயிரிழந்த இருவர் தவிர்த்து 24 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவை என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த பதினைந்து மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 47,487 ஆக அதிகரித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவத்தின் படை நடவடிக்கை 13 நாட்களுக்கு மேலாக நீடிப்பதோடு வீதியில் கூடியிருந்தோர் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 16 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்தாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
ஜெனின் பகுதியில் முன்னர் நடத்திய வான் தாக்குதல்களில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.
காசாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் இதுவரை குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு பலரும் காயமடைந்துள்ளனர். ஜெனின் தாக்குதல் தவிர இஸ்ரேலியப் படை துல்கராம் நகர் மற்றும் அதன் அகதி முகாமிலும் தொடர்ந்து சுற்றிவளைப்புகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்கேபை இன்று (03) நெதன்யாகு வொஷிங்டனில் சந்திக்கவிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து காசா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என்றும் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நெதன்யாகு நேற்று வொஷிங்டனை நோக்கி புறப்பட்டுச் சென்றதோடு அவர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதுவரை பேச்சுவார்த்தைக்கான தூதுக் குழுவை கட்டாருக்கு அனுப்பாமல் இருப்பதற்கு நெதன்யாகு தீர்மானித்திருப்பதாக இஸ்ரேலிய செய்தித் தளமான ‘வொல்லா’ தெரிவித்துள்ளது.