(UTV | சென்னை) – ரஜினியை தொடர்ந்து அஜித்தின் வலிமை படமும் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் ரஜினி அளவிற்கு ஜப்பான் ரசிகர்களை அஜித் கவருவாரா, வலிமை படம் ஜப்பானில் பிளாக் பஸ்டர் படமாகுமா என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் போலீஸ் கெட்அப்பில் நடித்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட வலிமை, பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ள வலிமை படம் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வலிமை ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பிப்ரவரி 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உலகின் பல நாடுகளிலும் வலிமை படம் சென்சார் குழுவால் சரி பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது ஜப்பானிலும் வலிமை படம் ரிலீஸ் செய்வது உறுதியாகி உள்ளது. வலிமை படத்திற்கான டிக்கெட் புக்கிங் இந்தியாவிலேயே இன்னும் துவங்கப்படாத நிலையில், ஜப்பானில் வலிமை டிக்கெட் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் முத்து பட ரிலீசுக்கு பிறகு ரஜினிக்கு தான் ரசிகர்கள் அதிகம். இதனால் வலிமை படத்தை பார்த்த பிறகு ரஜினி அளவிற்கு ஜப்பான் ரசிகர்களின் மனங்களை அஜித் கவருவாரா என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மிக விரைவில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வலிமை படம் 100 சதவீதம் பார்வையாளர்களுடனேயே ரிலீசாகும் என்ற நம்பிக்கையுடன் அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பிப்ரவரி 15 ம் தேதிக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், அதை கன்ஃபார்ம் செய்து கொண்டு டிக்கெட் புக்கிங்கை துவக்க காத்திருக்கிறார்களாம்.
பைக் ரேஸ், அசர வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ள வலிமை படத்தில் பல காட்சிகளில் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளாராம். இதனால் படத்தை உலக அளவில் பிளாக் பஸ்டர் படமாக்க படக்குழு தீவிரமாக முயற்சி செய்து வருகிறதாம். இரண்டு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் வலிமை நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.