உள்நாடு

சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமர் சந்திப்பு

(UTV | கொழும்பு) – சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) பொதுச் செயலாளர் ஜகான் செபகன் (Jagan Chapagan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (08) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர்.

உலகின் மிகப்பெரிய மனிதாபிமான சேவையாற்றும் அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனம் 192 நாடுகளில் காணப்படுகின்றன.

கொவிட் தொற்று உள்ளிட்ட வரலாற்றில் இலங்கை மக்கள் முகங்கொடுத்த ஒவ்வொரு பேரிடரின் போதும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிய சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்திற்கு கௌரவ பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் காணப்படும் உறுப்பு நாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படும் முன்னணி சங்கமாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் விளங்குவதாக சுட்டிக்காட்டிய சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜகான் செபகன் அவர்கள், எதிர்கால நிவாரணப் பணிகளில் அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இலங்கை மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க முன்னெடுக்கும் பணிகளுக்கு அரசாங்கம் பூரண ஆதரவளிப்பதாக கௌரவ பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் இந்திய பிராந்திய தலைமை பிரதிநிதி உதய ரெஜிம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க, பணிப்பாளர் நாயகம் வைத்தியர் மஹேஷ் குணசேகர, பிரதி பணிப்பாளர் நாயகம் அருண லேகம்கே ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு!

நோயில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு!