(UTV | கொழும்பு) – நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் வேறு காரணங்களுக்காக ஆலோசனை கோரப்படவில்லை எனவும் இதுவொரு வழமையான செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார்.
Finance Minister’s comment yesterday (2) re.”#SriLanka informing @IMFNews to provide #expert advice on #economic situation” is about a routine Technical Assistance Program on Macro-Fiscal capacity building for MOF’s new Macro-Fiscal Unit. Nothing else. @RealBRajapaksa @CBSL #lka
— Ajith Nivard Cabraal (@an_cabraal) February 3, 2022
சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக உத்தியோகப்பூர்வ கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை. எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாகப் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாகச் சர்வதேச நாணய நிதியம் உள்ளது. இதற்கமைய அவர்களிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.