(UTV | கொழும்பு) – ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரிடம் அவர் சரணடைந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனமும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் நேற்று (02) ஆறு சந்தேக நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் ஒருவரும் அவருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட கார் சாரதியும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும், நேற்று (02) பிற்பகல் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதேவேளை, சம்பவ இடத்தில் இருந்த தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உட்பட இதுவரை 10 பேரிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று (02) அதிகாலை 3 மணியளவில் இரண்டு கார்களில் சுமார் 15 பேர் குறித்த தாக்குதல் மேற்கொள்ள வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கார் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான wp KI 2376 என்ற இலக்கம் கொண்ட கார் இந்த வருடத்திற்காக பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என பொலிசார் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த மூன்று மாணவர்களில் இருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.