(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளை முன்னெடுக்க எடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்;
“..எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளையும் மூடி, மார்ச் மாத முதல் வாரத்தில் மீளவும் திறக்குமாறு கோருகிறோம்.
இதற்கிடையில், கடந்த 10ம் திகதி முதல் பாடசாலை மட்டத்தில் கொவிட் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது தெளிவாகிறது.
அனைத்து மாணவர்களையும் மீண்டும் பாடசாலைக்கு அழைக்கும் அரசின் முடிவினால், பாடசாலை மாணவர்களிடையே கொவிட் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு..” எனத் தெரிவித்திருந்தார்.