(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட பயிற்சி வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு நேற்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறும்.
இதற்கமைவாக துறைசார் விரிவுரையாளர்கள், கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களை நடத்துவதும், பரீட்சையை இலக்காகக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதும், பகிர்ந்தளிப்பதும், இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவதும், பரீட்சை இடம்பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் இவ்வாறான வினாத்தாள்கள் வழங்கப்படுமென சுவரொட்டிகள் மற்றும் பெனர்கள் மூலம் அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கு விதிகளை மீறுவோர் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்கு வசதியாக 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் இந்த பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.