உலகம்

புதிய வகை கரோனா வைரஸ் ‘நியோகோவ்’ ஆபத்தானது

(UTV |  பீஜிங்) – புதிய கொரோனா வைரஸ் ‘நியோகோவ்’, மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது என்று சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1920-களில் விலங்குகள், பறவைகளிடம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டில் சீனாவில் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘சார்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இதன்பின், கடந்த 2012-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியது. அதற்கு ‘மெர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது.

அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் கொரோனா வியாபித்து பரவியிருக்கிறது. தற்போது வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள், கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற வைரஸ் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை https://www.biorxiv.org/அறிவியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

‘வௌவால்களிடம் இருந்து நியோகோவ் என்ற கரோனா வைரஸ் காணப்படுகிறது. நியோகோவ் வைரஸில் ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால்கூட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸாகும். அதாவது, இவ்வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரில் 3 பேரில் ஒருவர் உயிரிழக்கக் கூடும்’ என்று ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றியதாக சீன அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்க மறுத்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக குற்றம்சாட்டின.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவவில்லை’ என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

புதிய நியோகோவ் வைரஸ் குறித்த சீன விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை, உலக சுகாதார அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு வட்டாரங்கள் கூறும்போது, “தென்னாப்பிரிக்காவில் வாழும் வௌவால்களிடம் நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தன.

Related posts

மெக்ஸிக்கோ – கனேடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்

குஜராத்திலும் நில அதிர்வு