(UTV | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பிக்குமாறு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், நேற்று(26) கட்டளையிட்டது.
2016ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போதான மோசடி தொடர்பிலேயே சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, அமல் ரணராஜா, நாமல் பலல்லகே மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகள் மீது முன்வைக்கப்பட்ட 22 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கு கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆரான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன, மன்றில் அறிவித்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் காலங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றினால் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் வழக்கு விசாரணைகளுக்காக பிறிதொரு தினத்தை அறிவிக்குமாறும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் கோரி நின்றார்.
அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகளுக்கு எதிராக மீதமுள்ள 11 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கட்டளை பிறப்பித்தது.