(UTV | கொழும்பு) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு விசேட நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அமித் ஜயசுந்தர, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான பரீட்சார்த்திகளுக்காக நாடளாவிய ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலை மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வது பொதுவான செயல்முறையாகும்.
எவ்வாறாயினும், மாணவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தால், அவர்களை பெற்றோர் சிறப்பு பரீட்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஜயசுந்தர குறிப்பிட்டார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றோர்கள் விசேட பரீட்சை நிலையங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், பரீட்சை நிலைய கண்காணிப்பாளரிடம் ரெபிட் அன்டிஜென் சோதனை அல்லது PCR சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.