உள்நாடு

தீவிரமான முடிவுகளை எடுக்காவிட்டால் ஸ்தம்பித்து நிற்க வேண்டியிருக்கும்

(UTV | கொழும்பு) –  நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் தீவிரமான முடிவுகள் எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு புத்தாண்டை ஆரம்பித்து வைத்து நேற்று (03) பத்தரமுல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், முதலில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் நான் பார்த்திராத வாகனங்களின் நீண்ட வரிசை இன்று கண்டேன். இதுவே நெடுஞ்சாலை அமைச்சு எதிர்கொள்ளும் சவாலாகும். நெடுஞ்சாலைகளின் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல்களின் பல படங்களைப் பெற்றேன். அமைச்சு என்ற வகையில் இவற்றுக்கு தீர்வு காண வேண்டும். தற்போது அனைத்து கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போக்குவரத்து நெரிசலுக்கு அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றன. எனவே, ஒரு அமைச்சு என்ற ரீதியில் நாம் இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே இந்த புத்தாண்டில் புதிய வழியில் சிந்தித்து செயல்படுவோம். அமைச்சு மற்றும் அதிகார சபையின் முன்னேற்றத்திற்காக நாம் சில தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு, மாற்றங்களைச் செய்தால், வேலையை இன்னும் திறம்பட செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். அவ்வாறான முடிவுகளை எடுக்காவிட்டால் நாம் ஸ்தம்பித்து நிற்க வேண்டியிருக்கும்.

மாற்றப்பட வேண்டிய துறைகளை மாற்றி, இந்த அமைச்சை உயர்மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம். நீங்களும் நானும் விரைவான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நாங்கள் உங்களையும் எங்களையும் பாதுகாக்கும் வகையில் முடிவுகளை எடுத்துள்ளோம். கடந்த கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​​​நீங்கள் வேலைக்கு வரும்போது, ​​​​வீட்டில் உங்கள் அன்புக்குரியவர்களை காலான் எடுத்துச் செல்லும் நிலை காணப்பட்டது. அந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் நாட்டிற்கும் தேசத்திற்கும் உங்களால் முடிந்த சேவையைச் செய்தீர்கள். நீங்கள் செய்த அர்ப்பணிப்பை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அதை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு உள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை நனவாக்கி, நாட்டு மக்களுக்கு வசதியான வீதிக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் உறுதிபூண்டுள்ளோம். புதிய வழியில் சிந்தித்து இலக்கை அடைகிறோம். இந்த ஆண்டு நமது நாடு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை.

விழா முடிந்ததும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

எதிர்காலத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளலாம். அது ஜனாதிபதியின் பணி. எனவே அமைச்சரவை மாற்றம் செய்யப்படுமா இல்லையா என்பதை ஜனாதிபதியிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு ஜனாதிபதி அதிகாரம் இல்லை.

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தேவையா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்… ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வருவார். அதனை ஜனாதிபதிதான் தீர்மானிக்க வேண்டும்.

அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு, டொலர் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எரிவாயு பிரச்சினைக்கு நிறுவன தலைவர் மற்றும் அதிகாரிகள் சரியாக வேலை செய்யாததே இதன் பிரச்சனைகளுக்கு காரணம். அதனால்தான் கிறிஸ்மஸ் அன்று எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுப்பேற்றவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது இந்நாட்டு மக்களஞகளுக்கு செய்யும் கடமை என்றார்.

அமைச்சுக்களின் செயலாளர்களை இடமாற்றம் செய்வதன் மூலம் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், செயலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என ஜனாதிபதி கருதினால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும். ஒரு அமைச்சர் சரியாக வேலை செய்யவில்லை என ஜனாதிபதி நினைத்தால், ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்குவார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்கிறீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நான் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல மாட்டேன். அரசு தான் செல்ல வேண்டும். நிதி அமைச்சர் அந்த முடிவை எடுப்பார். அவர்கள் போக வேண்டும் என்று நினைத்தால் அது ஒன்றும் புதிதல்ல. இது தொடர்பாக அறிக்கை வெளியிட நான் நிதியமைச்சர் அல்ல.

சஜித் பிரேமதாச இந்த அரசாங்கம் சியாம்பலாண்டுவவில் உள்ள சவ ஊர்தி போன்றது என கூறுவதற்கு பதிலளித்த அவர், பிரேமதாச பற்றி நான் எதுவும் கூறப்போவதில்லை. அவரைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு ஏற்றவர்.ரணில் விக்கிரமசிங்க இருப்பதை போல உள்ளது. சியாம்பலாண்டு போய் ஒன்று சொல்கிறார். அம்பாந்தோட்டைக்கு போய் வேறொன்று சொல்கிறார். விருந்துகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து மனைவியுடன் மது அருந்துகிறார். சந்தைக்குச் சென்று பொருளாதாரம் சரிந்துவிட்டது, பணமும் இல்லை, உணவும் இல்லை என்று கூறுகிறார். அவரைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருப்பது நமக்கு நல்லது. ஒரு தடவை மக்கள் அவருக்கு சரியான பதில் அளிக்கப்பட்டது. எதிர்காலத்திலும் பிரதேச சபை மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறும் போது அவரின் நிலை என்ன என்பது தெளிவாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் விடுதலை முன்னணியுடன் இணையுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் விடுதலை முன்னணியுடன் இணையலாம். ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு அரசியல் கட்சி. அவர்கள் இப்போது எங்களுடன் இணைந்துள்ளனர். பிரேமதாசவுடன் நீங்களும் இணையலாம். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிரேஷ்ட திறமைசாலிகள் இந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

கிராமிய வீதிகள் மற்றும் குடியிருப்பு உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே, பணிப்பாளர் சர்தா வீரகோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய திட்டம்

சஜித் பிரேமதாசவுக்கு அச்சுறுத்தல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் வழமைக்கு