(UTV | கட்டான) – நீர்கொழும்பு – கட்டான, கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தில் செஸ்னா 172 (Cessna 172) ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானமொன்று, வயல்வெளியொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப் படை பேச்சாளர் க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சீகிரிய விமானப் படைத் தளத்திலிருந்து கொக்கலை நோக்கிப் பயணித்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வர்த்தக விமானமொன்றே இவ்வாறு இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த விமானத்தில் பயணித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் அறிந்த கட்டுநாயக்க விமானப்படையின் மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி களுத்துறை பயாகல கடற்கரையை அண்மித்த பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்றும் கடந்த 22 ஆம் திகதி திடீரென தரையிறக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.