(UTV | கொழும்பு) – பாதிப்பினை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்ததாக கூறப்படும் சீன நிறுவனம் மற்றும் அதன் தேசிய முகவருக்கு நிதி வழங்குவதற்கு மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையினை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
கொழும்பு கொமர்ஸல் உர நிறுவனம் முன்வைத்த மனு இன்று(23) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, குறித்த தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அறியப்படுத்தியுள்ளார்.
அதேநேரம், தற்போது மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை அன்றையதினம் வரையில் தொடருவதற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரர் தரப்பான உர நிறுவனம், முன்னதாக நீதிமன்றில் முன்னிலையாகி தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தது.
பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய சேதன பசளையை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் விலைமனுக்கோரலை பெற்றுக்கொண்ட பிரதிவாதியான சின்டா ஓ சிவின்க் பயோடென் குழுமம் என்ற சீன நிறுவனம் அந்த விலைமனுவினை செயற்படுத்தும் வகையில் குறித்த சேதன பசளையை இறக்குமதி செய்ததாக தெரிவித்தது.
இதனடிப்படையில், தொற்று நீக்கப்பட்ட சேதன பசளையை வழங்கியிருக்க வேண்டிய போதிலும், அதில் பக்டீரியாக்கள் உண்டு என்பதை கப்பல் ஆலோசனை அறிக்கை மூலம் அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பான உர நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.