(UTV | கொழும்பு) – பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள மக்களையும் பாதிக்காத வகையிலான நடைமுறைக்கு பொறுத்தமான எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
திடீரென எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் இதனால் நாட்டு மக்கள் எதிர்கொள்ளக் கூடிய பாதிப்புக்கள் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பபப்பட்டது.
இதன்போது மேற்கண்டவாறு பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
“..எரிபொருள் விலை அதிகரிப்பு பணவீக்கத்தில் 3 சதவீதம் தாக்கம் செலுத்தும் என்று மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. எனவே எரிபொருள் பாவனை தொடர்பில் ஒழுக்கத்தினை பேண வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகவுள்ளது.
எனினும் இதன் காரணமாக அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
பாதிக்கப்படுபவர்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறு உதவுவது என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக எம்மால் முன்னெடுக்கப்படக் கூடிய நடைமுறைகள் எவை என்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்..”