உலகம்

எகிறும் ஒமிக்ரோன் தொற்று

(UTV | ஜெனீவா) – தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரோன் 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் திகதி முதல் முறையாக ஒமிக்ரோன் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஜெனிவாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“.. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்ற பிரிவான ஒமிக்ரோன் வைரஸ் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் 4 அல்லது 5 மண்டலங்களில் காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

ஒமிக்ரோன் இந்த வளர்ச்சியை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆனால், ஒமிக்ரோனின் இந்த வளர்ச்சி எங்களுக்கு வியப்பாக இல்லை. வைரஸ்கள் என்ன செய்யுமோ அதைத்தான் செய்கிறது. நான் அனுமதிக்கும் வரை இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டேதான் இருக்கும்.

ஒமிக்ரோன் குறித்து நிறைய அறிந்து வருகிறோம், இன்னும் அதன் பரவல் குறித்து அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த நோயின் தீவிரம், பரிசோதனையின் முக்கியத்துவம், தடுப்பூசிகள், சிகிச்சை குறித்து அதிகமாக அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது

கடந்த இரு நாட்களாக உலக சுகாதார அமைப்பின் பல்வேறு ஆலோசனைக் குழுவின் வல்லுநர்கள் சேர்ந்து ஒமிக்ரோன் வளர்ச்சி, அதன் வடிவங்கள் குறித்து ஆலோசனை நடத்தி மதிப்பீடு செய்தனர். பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க தொடர்ந்து ஆய்வுகள் தேவை..” எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஒமிக்ரோன் கண்டறியப்பட்டபின் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, அமெரி்க்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரானில் ஒரு இலட்சத்தை தாண்டிய நோயாளிகள் எண்ணிக்கை

வியட்நாமை சூறையாடிய சூறாவளி – 136 பேர் பலி

மலேசியாவின் மஹதீர் முகமது தேர்தலுக்குத் தயாராகிறார்