வணிகம்

பாகிஸ்தான் – இலங்கை வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்புகளில் வலுவான நிலை

(UTV | கொழும்பு) – கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், 33வது ராவல்பிண்டி வர்த்தக மற்றும் தொழில்துறை சர்வதேச சாதனை விருதுகள் மற்றும் பாகிஸ்தான் இலங்கை வர்த்தக வாய்ப்புகள் மாநாட்டை, பாகிஸ்தானின் மூன்றாவது பாரிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனமான ராவல்பிண்டி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் இணைந்து 23 நவம்பர் 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சர்வதேச சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பாகிஸ்தானின் முன்னணி தொழில்முனைவோருக்காண விருதுகளை வழங்கி வைத்தார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது உரையின் போது, இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயமானது இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான ஆதரவு மற்றும் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது என நினைவு கூர்ந்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான பரந்த அடிப்படையிலான நீண்டகால ஒத்துழைப்பை அவரது விஜயம் மேலும் வலுப்படுத்தியுள்ளதாக மாண்புமிகு பிரதமர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று உறவானது , பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பரந்த மற்றும் வளமான பௌத்த பாரம்பரியத்தால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட “காந்தாரா : பாகிஸ்தானின் புத்த பாரம்பரியம்” என்ற அதிநவீன ஆவணப்படம் குறித்தும் மாண்புமிகு பிரதமர் கருத்துத்தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை ஒட்டி, 2021 பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெற்ற பாகிஸ்தான் – இலங்கை வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டை அடுத்து, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ராவல்பிண்டியில் இருந்து பாகிஸ்தானின் சுமார் 100 வர்த்தகப் பிரதிகளுக்கான இலங்கை விஜயம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தக அமைச்சர் கௌரவ கலாநிதி பந்துல குனவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் உரையாற்றிய மாண்புமிகு வர்த்தக அமைச்சர், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பாகிஸ்தானின் முன்முயற்சியை வரவேற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவினை சுட்டிக்காட்டினார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் எவ்வாறாயினும், சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் முழு சாத்தியப்பாட்டையும் உறுதிசெய்ய தொடர்ச்சியான முயற்சிகள் தேவை எனவும் கௌரவ வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டியதோடு பாகிஸ்தானுக்கான இலங்கை பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் இலங்கை வர்த்தக நாமங்கள் மற்றும் தயாரிப்புகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கான பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் திரு.தன்வீர் அஹமட் உரையாற்றும் போது, பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) செய்து கொண்ட முதல் நாடு என்ற பெருமையை இலங்கை அனுபவிக்கிறது என்று சுட்டிக்காட்டியதோடு பாகிஸ்தான் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அமைய, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் உயர் சாத்தியமுள்ள துறைகளில் கூட்டு முயற்சிகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு உறவுகளை மேலும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இலங்கையுடனான உயர் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பதில் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

வர்த்தகச் செயலர் திருமதி அஸ்மா கமால், இருதரப்பு வர்த்தகத்தின் சாத்தியமான பகுதிகள், சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கப்படுத்தியதோடு இக்கருத்தரங்கில் நோக்கம் மற்றும் அடைவுகள் குறித்தும் கருத்துத் தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் இது போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார்.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் வர்த்தக மற்றும் முதலீட்டுப் பிரிவானது, இலங்கையில் முதலீட்டாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பாகிஸ்தானிய வர்த்தக சமூகத்தினரிடையே வர்த்தக ரீதியிலான கலந்தாலோசனை ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) மற்றும் இலங்கை வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FCCISL) ஆகியவற்றுக்கிடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கைச்சாத்திடப்பட்டன. அதே வேளையில், மருந்து உற்பத்தி, வாகன மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கையில் நிலவும் கொவிட்-19 விதிமுறைகளின்படி இந்நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதி

மெனிங் சந்தையில் நுகர்வோரின் எண்ணிக்கை குறைவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு