(UTV | துபாய்) – பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோய்னிஸ், வேட் இருவரும் சேர்ந்து 81 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றி பெற வைத்தது.
20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயற் சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்தது. முகமது ரிஸ்வான் 52 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 67 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கவீரர் பாபர் அசாம் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய பகர் சமன் 32 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 55 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து, 177 ஓட்டங்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னருடன் அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 5 ஓட்டங்களுடன் மேக்ஸ்வெல் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய வார்னர் 49 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஆஸ்திரேலியா 96 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து இறங்கிய ஸ்டோய்னிஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார். வேட் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 50 ஓட்டங்களை விரைவாக கடந்தது.
இறுதியில், ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 40 ஓட்டங்களுடன் வேட் 17பந்தில் 41 ஓட்டங்களுடன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.