விளையாட்டு

பிரதமர் கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி இன்று

(UTV | கொழும்பு) – பங்களாதேஷ், மாலைதீவுகள், சிஷெல்ஸ், இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று (08) இரவு 9.00 மணிக்கு நடைபெறும் ஆரம்ப விழாவுடன் தொடங்கவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலிஹ் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி இலங்கையில் மீண்டும் கால்பந்தாட்டம் உயரிய நிலையை அடைவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணிக்கும் சிஷெல்ஸ் அணிக்கும் இடையில் ஆரம்பப் போட்டி நடைபெறும்வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தபோதிலும் சிரற்ற காலை நிலை காரணமாக அப்போட்டியை ஒரு தினத்தால் பிற்போட நேரிட்டதாக அவர் மேலும் கூறினார்.

இன்று இரவு நடைபெறவுள்ள ஆரம்ப விழா வைபவத்தின்போது மாலைதீவுகள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலிஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட விசேட பிரமுககர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் லீக் போட்டிகள் தொடர்ந்து 9, 11, 14ஆம் திகதிகளில் நடைபெறுவதுடன் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜனவரி 19ஆம் திகதி நடைபெறும்.

அன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்குவார். சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜியோவன்னி இன்பன்டீனோ விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

Related posts

புதிய சாதனை பட்டியலில் ஆண்டர்சன்

பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து அணி

நேற்றைய I P L போட்டியின் முடிவுகள் இதோ